
மகாராஷ்டிர அமைச்சர் ஜெயகுமார் ராவல், தங்களது பாரம்பரிய நிலத்தை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ளதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் துளே மாவட்டத்தின் ஷிர்ப்பூர் தாலுக்காவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் அவரது சகோதரர்களுக்குச் சொந்தமாக 33 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலத்தை, சட்டவிரோதமாக ஆக்கிரமித்த மகாராஷ்டிரத்தின் பாஜக அமைச்சர் ஜெயகுமார் ராவல், அதற்குச் சொந்தம் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கில் முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தினருக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் அமைச்சர் ஜெயகுமார் ராவல் அந்த இடத்தில் இருந்து தனது ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுத்து வருவதாகவும், அவரது பதவி அதிகாரத்தின் மூலம் ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் உறவினரான உதய் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“இந்த விவகாரம் குறித்து காவல் துறையினரிடம் புகாரளித்தும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முழுவதுமாக, அதிகாரிகள் அனைவரும் அமைச்சர் ஜெயகுமார் ராவலுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரன மக்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை?” எனக் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, இதுவரை அமைச்சர் ஜெயகுமார் ராவல் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், உயர் அதிகாரிகள் தலையிட்டு நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பூர்வமாகத் தங்களது நிலத்தை மீட்டு தரவேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை! தொடக்கிவைத்தார் பிரதமர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.