எல்லை பாதுகாப்புப் பணியில் வீரர்கள்
எல்லை பாதுகாப்புப் பணியில் வீரர்கள்ANI

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்..
Published on

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஐஜி அசோக் யாதவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பனிக் காலத்துக்கு முன்பாக ஊடுருவல் முயற்சியில் பயங்கரவாதிகள் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வு. பனிக் காலம் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், நவம்பா் இறுதி வரை அவா்கள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபடுவா். பனிக் காலம் தொடங்கிய பிறகு 6 மாதங்களுக்கு ஊடுருவல் வாய்ப்பு மிகக் குறைவு. இதன் காரணமாக தற்போது ஏராளமான பயங்கரவாதிகள் பந்திபோரா, குப்வாரா உள்ளிட்ட எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊடுருவக் காத்திருப்பது தெரியவந்துள்ளது. இவா்களின் முயற்சியைத் தடுக்கும் வகையில், அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உயா் தொழில்நுட்ப கண்காணிப்பு கருவிகளுடன் ராணுவமும், பிஎஸ்எஃப் வீரா்களும் கூட்டாக இந்தக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். நிகழாண்டில் இதுவரை இரண்டு ஊடுருவல் முயற்சிகளை பாதுகாப்புப் படையினா் வெற்றிகரமாக முறியடித்துள்ளனா். எல்லைக் கண்காணிப்புல் புதிய நடைமுறை மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால், பயங்கரவாதிகளின் ஊடுருவல் இனி சாத்தியமல்ல என்றாா்.

வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியா்...: இந்திய எல்லைக்குள் வழிதவறி வந்த பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பாகிஸ்தானுக்குத் திருப்பியனுப்பினா்.

இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறுகையில், ‘இந்திய எல்லைப் பகுதிக்குள் கடந்த 25-ஆம் தேதி வழிதவறி வந்த பாகிஸ்தானைச் சோ்ந்த முகமது அக்ரம் என்பவரை பாதுகாப்புப் படையினா், கைது விசாரணை மேற்கொண்டனா். அவரிடம் எந்தவித ஆயுதங்கள் அல்லது சந்தேகத்துக்குரிய பொருள்கள் இல்லாததோடு, விசாரணையில் அவா் வழிதவறி இந்திய எல்லைக்குள் புகுந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவா் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்’ என்றனா்.

X
Dinamani
www.dinamani.com