
சம்பல்: உத்தரப்பிரதேசத்தில், நடந்து வந்த மிகப்பெரிய உடல்கூராய்வு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். 31 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த உடல்கூராய்வு மோசடியில் ஏராளமான மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், பிணவறை ஊழியர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும் கொலை வழக்குகளில், உடல் கூராய்வு முடிவுகளை மாற்றிக் கொடுத்து கொலையாளிகளை அப்பாவிகளாக்க ஒரு பொய் ரிப்போர்ட்டுக்கு ரூ.50 ஆயிரம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு கொலை வழக்குகளில், கொலை செய்யப்பட்டவர், கொலையாளியிடமிருந்து தப்புவிக்க நடத்திய போராட்டம், மரணம் நிகழ்ந்ததற்கான காரணம் முற்றிலும் மாற்றப்படுவது, அல்லது உண்மையான உடல் கூராய்வு கோப்புகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட என அனைத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் பெறப்பட்டுள்ளது.
இதுவரை விசாரித்து முடிக்கப்பட்ட ஏராளமான கொலை வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்போது, இந்த உண்மை தெரிய வந்ததாகவும், இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு 31 சட்டவிரோத சுகாதார மையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் வந்துகொண்டிருந்தபோது ஒருவர் மரணமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது உடலில் காயங்கள் இருந்ததை குடும்பத்தினர் பார்த்துள்ளனர். ஆனால், அவரது உடல் கூராய்வில் அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படாமல் உறக்கத்திலேயே மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இறந்தவரின் மகன் சென்று உடல்கூராய்பு அறிக்கை கேட்ட போது, அது காணாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளனர்.
கொலை செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், கொலைக்கான முக்கிய சாட்சி, உடல் கூராய்வு முடிவுதான். இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு எவ்வாறு போராடுவது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கலங்கியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் கலந்த சில ஆண்டுகளாகவே, கொலை வழக்குகளில், கொலையாளிகளைக் காப்பாற்றும் வகையில் உடல் கூராய்வு முடிவுகள் அளிக்கப்பட்டிருப்பதும், ஏராளமான மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க... கரூர் பலி: செந்தில் பாலாஜிக்கு தொடர்பு! மக்கள் மீது தடியடி!! தவெக மனு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.