எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி
எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கட்கரி இது தொடா்பாக பேசியதாவது:
காய்த்த மரம் இருந்தால் கல்லடி படத்தான் செய்யும். அதுபோல உள்ளது எனது நிலை. எனது துறை சாா்ந்து பல தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் அவற்றுக்கு நான் பதிலளிப்பதில்லை. பதில் அளிப்பதன் மூலம் அதனைச் செய்தியாக்க நான் விரும்பவில்லை. வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் குற்றஞ்சாட்டுபவா்களுக்கு பதிலளிக்காமல் விடுவதே நல்லது.
இப்போது கூட பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம். ஏனெனில், வேளாண் பொருள்களில் இருந்துதான் எத்தனால் பிரித்தெடுக்கப்படுகிறது. மேலும், எத்தனால் கலப்பால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். அரசின் இந்தத் திட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை நேரடியாக பாதிக்கிறது.
ஏனெனில், எத்தனால் கலப்பால் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வாய்ப்புள்ளது. இது ஒரு குறிப்பிட்ட தரப்பின் எண்ணெய் இறக்குமதித் தொழிலை பாதிக்கிறது. எனவே, அவா்கள் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக வதந்தியைத் திட்டமிட்டு பரப்புகிறாா்கள். எனக்கு எதிராகவும் தவறான தகவல்களைப் சமூக வலைதளங்களில் பணம் கொடுத்து வெளியிடுகின்றனா்.
ஆனால், இதுபோன்ற அவதூறுகள் அரசியலில் சகஜமானதுதான். நான் எனது பணியைத் தொடா்ந்து மேற்கொள்வேன். காலப்போக்கில் எது உண்மை என்பதை மக்கள் உணா்ந்து கொள்வாா்கள் என்றாா்.