சொல்லப் போனால்... வாகனங்களைக் கொல்லும் விஷமா, எத்தனால்?

இ20 - 20 சதவிகித எத்தனால் கலப்பு பெட்ரோல் கட்டாயம் என்ற நிலையில் பாதிக்கப்படும் நடுத்தர மக்களின் நிலைமை பற்றி...
E20 petrol
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது...சித்திரிப்பு / விஜய்
Published on
Updated on
5 min read

வாகனங்களுக்கு இருபது சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (இ20) மட்டுமே விநியோகிக்கும் அரசின் திட்டத்துக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இதைப் பற்றிய விவாதங்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்குத் தீவிரமடைந்திருக்கின்றன.

2023 ஏப்ரலில் 20 சதவிகித எத்தனால் கலப்பு பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2030 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் எனத் திட்டமிடப்பட்டிருந்தபோதிலும் 5 ஆண்டுகள் முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஒரு சதவிகிதத்தில் தொடங்கி, தற்போது 20 சதவிகிதமாக உயர்ந்து, இந்தியா முழுவதுமே தாவர எரிபொருளான எத்தனால் கலக்கப்பட்டுதான் பெட்ரோல் விநியோகிக்கப்படுகிறது  (எத்தனை சதவிகிதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் என்பதைக் குறிப்பிடும் வகையில் இ20, இ10, இ5, இ0 என்று குறிக்கப்படுகிறது).

2023 ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் யாவும் இ20 ரக பெட்ரோலில் இயங்கக் கூடிய திறனைப் பெற்றவை – பொருத்தமானவை – அல்ல; அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டவை அல்ல என்றபோதிலும், தற்போது இ20 பெட்ரோலை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். கட்டாயப்படுத்தக் கூடாது; இ20 பெட்ரோல் காரணமாகப் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன; விரும்பும் வகை பெட்ரோலைப் பயன்படுத்த மக்களை அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுதல்களைத்தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டிருக்கிறது.

எத்தனால் கலப்பு மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும், வாகனங்களிலிருந்து கார்பன் வெளியேற்றம் குறைகிறது, தவிர, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு நல்ல சந்தை மதிப்பு கிடைக்கிறது என்றெல்லாம் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, நேர்காணல் ஒன்றில் சில நாள்களுக்கு முன் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, பெட்ரோலுடன் தற்போது 20 சதவிகித எத்தனால் கலக்கப்படுகிறது. விமான எரிபொருளுக்காக கூடுதலான எத்தனால் கலப்பை அதிகரிக்கவிருக்கிறோம்; விரைவில் டீசலுடன் ஐசோபியூடனால் (Isobutanol) கலப்பதையும் அதிகரிக்கவிருக்கிறோம் என்று அறிவித்தார்.

“எத்தனால் கலப்பு காரணமாக மக்காச்சோள விலை உயர்ந்து, சாகுபடியாளர்கள் லாபம் ஈட்டியிருக்கின்றனர். நாட்டின் கரும்பு சாகுபடியும் சர்க்கரைத் தொழிலும்  மீட்கப்பட்டிருக்கிறது.

“அரசின் 20 சதவிகித எத்தனால் கலப்பு திட்டத்துக்கு எதிராக பணம் கொடுத்து அரசியல் பிரசாரம் செய்யப்படுகிறது. இ20 பெட்ரோல் பயன்பாட்டால் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என அனைத்து பரிசோதனைகளும் உறுதி செய்துள்ளன.

மேலும், வாகனங்களின் என்ஜின் பழுது, வாரன்டி பிரச்சினைகள் என்ற அச்சங்கள் எல்லாம் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளன” என்றும் கட்கரி குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் வெகுண்டெழுந்த மக்களும் செயற்பாட்டாளர்களும் வாகனப் பயனாளர்களும் சமூக ஊடகங்களில் தீவிரமாகத் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு தொடங்கி இத்தனை ஆண்டுகளானபோதிலும் இன்னமும்கூட எத்தனால் கலந்த பெட்ரோலை இருப்பு வைத்திருப்பதற்கான கட்டமைப்புகள் சரியாக உருவாக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தண்ணீரை - ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது எத்தனால் என்பதால் நிலத்தடி பெட்ரோல் தொட்டிகளில் தண்ணீர் கசிந்து புகுவதாகவும் எத்தனாலுடன் தண்ணீர் சேரும்போது வெள்ளைத் திரவமாக மாறி விடுவதாகவும்கூட குற்றம் சாட்டுகின்றனர்.

பழைய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பெரும்பாலானவற்றின் பெட்ரோல் தொட்டிகள் இரும்பு போன்ற உலோகத்தால் ஆனவையே (நாரிழை கலந்த பாலிமர் போன்றவற்றால் உருவாக்கப்படும் தொட்டிகளில் இந்தப் பிரச்சினை இருக்காது). இந்த விற்பனை நிலையங்களில் போடும் பெட்ரோலில் தண்ணீர் / ஈரப்பதம் கலந்திருக்கும் ஆபத்து அதிகம். இதைப் பயன்படுத்தும்போது கார்கள் பழுதாவது சர்வ நிச்சயம். பெட்ரோலில் இயங்கும் 2023-க்கு முந்தைய தயாரிப்புகள் - கார்கள், இரு சக்கர வாகனங்கள் - இதற்கேற்ப வடிவமைக்கப்படாததால் பல வகையிலும் பாதிக்கப்படுகின்றன.

20 சதவிகித எத்தனால் கலப்பதால் என்னென்ன நடக்கும்? வாகனங்களின், என்ஜின்களின் ஆயுள்காலம் பாதிக்கப்படுமா? எந்த அளவுக்குப் பாதிக்கப்படும்? எத்தகைய பாதிப்புகள் நேரிடும்? விரிவான ஆய்வுகள் எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் மைலேஜ் (ஒரு லிட்டருக்கு கார் செல்லும் தொலைவு) குறைவதாகவே பலரும் குறிப்பிடுகின்றனர். லிட்டருக்கு 18 – 19 கி.மீ. கொடுத்த கார், இப்போது 16.5 – 17 கி.மீ.தான் கொடுக்கிறது. ஆயிரம் கிலோ மீட்டருக்கு 600 ரூபாய் தண்டச் செலவு. அல்லாமல் என்ஜினுடைய நிலைமை  என்னவாகும்? என்றே தெரியவில்லை. இப்படியாக ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு விகிதத்தில் மைலேஜ் குறைகிறது.

கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கியிருக்கும் கார்களும்கூட இதே எத்தனால் கலந்த, ஈரப்பசை கொண்டிருக்கக்கூடிய பெட்ரோலில்தான் செலுத்தப்பட வேண்டும்.

20 சதவிகித அறிமுகத்துக்குப் பிறகு இரு சக்கர வாகனங்களிலும் நிறைய புகார்கள் வருகின்றன. இந்த கலப்பு பெட்ரோல் வெற்றிகரமானதென இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் 20 முதல் 25 சதவிகிதம் வரை மைலேஜ் குறைவதாகக் கூறுகின்றனர்.

ஆனால், நுகர்வோரின் இந்தக் கவலைகள் எதைப் பற்றியும் அரசு கண்கொண்டும் பார்க்கவில்லை; காது கொடுத்தும் கேட்பதாக இல்லை. உச்ச நீதிமன்றமும் இப்போது தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், பணம் கொடுத்துதான் இவ்வாறு இ20-க்கு எதிராகப் பிரசாரம் செய்யப்படுவதாக நிதின் கட்கரி குறிப்பிடவும் இன்னும் கொஞ்சம் வேகம் பிடித்திருக்கிறது எதிர்ப்பு மனநிலை (மைலேஜ், வேகம் எல்லாம் குறையும் என்ற மஹிந்திரா ஆட்டோ நிறுவன தலைமைச் செயல் அலுவலரின் கருத்தை எடுத்துப் போட்டு, இவரும் பெய்ட் ஏஜெண்ட்டா? என கிண்டலடிக்கின்றனர்).

எல்லாரும் உஜாலாவுக்கு, அல்ல, இ20-க்கு மாற வேண்டுமானால் அனைத்து வாகனங்களும் முற்றிலும் அதற்கேற்றவையாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். (ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை - இன்றைய சூழ்நிலையில் நாட்டிலுள்ள பெட்ரோலிய வாகனங்களில் 90 - 95% வாகனங்கள் இ20  பெட்ரோலுக்கு ஏற்ப வடிவமைக்கப்படாத முந்தைய மாடல்கள். இந்தக் கலப்பு பெட்ரோல் காரணமாக நேரிடக் கூடிய பாதிப்புகளுக்கு காப்பீட்டு உறுதியும் இல்லை எனப்படுகிறது).

தவிர, இந்த தாவர / உயிரி எரிபொருள் என்பதே பழைய ‘இத்துப் போன’ தொழில்நுட்பம் என்பவர்களும் இருக்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற காரணங்களால் 1970-களில் உலகில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்கிற, சர்க்கரை உற்பத்தி செய்கிற நாடான பிரேசில்தான் இந்த எத்தனால் கலப்பு எரிபொருளை முன்னெடுத்தது (கரும்பாலைகளிலிருந்து கிடைக்கும் மொலாசஸிலிருந்துதான் எத்தனால் தயாரிக்கப்படுகிறது). இந்த அரை நூற்றாண்டில் நிதானமாக, திட்டமிட்டு எல்லா வாகனங்களையும் எத்தனால் கலப்பு எரிபொருளுக்கு ஏற்றவையாகத் தகவமைத்துக்கொண்டுவிட்டது. ஆக, பிரேசிலுக்கு இது ஓகே.

உலகின் உற்பத்தியில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக எத்தனாலை தயாரிக்கும் அமெரிக்காவிலேயே இப்போதும் 10 சதவிகித எத்தனால் கலப்பு பெட்ரோல்தான் பயன்படுத்தப்படுகிறது; பழைய வாகனங்களுக்காக எத்தனால் கலக்காத பெட்ரோலும் கிடைத்துக்கொண்டுதானிருக்கிறது.

அரசின் உத்தரவு காரணமாக, இந்தியாவில் 2023 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு வெளிவந்த வாகனங்கள் மட்டுமே இ20 பெட்ரோலைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. அதற்கு முன் விற்கப்பட்ட, வாங்கப்பட்ட வாகனங்கள் யாவும் பொருத்தமற்றவை! ஆனால், இ20 பெட்ரோலை நிரப்பிதான் செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது அரசு. நீதிமன்றமும் நிராகரித்த நிலையில் நாடு முழுவதும் கதறிக் கொண்டிருக்கிறார்கள் முந்தைய வாகனங்களை வாங்கிய மக்கள்.

எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதைப் போல, விரைவில் நாடு முழுவதும் ‘தகுதியற்ற – மாசுபடுத்தும்’ 97 லட்சம் வாகனங்கள் கழித்துக் கட்டப்படும்; இதனால், ஆட்டோமொபைல் துறைவழி ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி வருவாய் வரும், 70 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றெல்லாமும் தெரிவித்திருக்கிறார் நிதின் கட்கரி.

எத்தனால் கலப்பு பெட்ரோலை அறிமுகப்படுத்தியபோது, விலை குறைவாக இருக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவித்தனர். ஆனால், அது வெறும் பேச்சுதான்  என்றாகிவிட்டது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தைவிட எத்தனால் கொள்முதல் செலவுமிக்கதாகிவிட்டது. போகப் போக இந்த நிலைமை மோசமாவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

தவிர, சாகுபடியிலேயே மிக அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிற பயிர் கரும்புதான். இதைவிட கொஞ்சம்தான் குறைவாக மக்காச்சோளத்துக்குத் தேவைப்படும்.

தண்ணீர்த் தட்டுப்பாடு, பராமரிப்புச் செலவு போன்றவற்றின் காரணமாகத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் குறைத்துக்கொண்டே வருகிறார்கள். ஏனெனில், கரும்பு ஓராண்டு காலப் பயிர். கரும்பில் குறைந்த கால வகையே 10 மாதங்கள்தான். நாட்டில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கிற பகுதிகள் குறைவே. மகாராஷ்டிரத்தில் கரும்பு விளைச்சல் அதிகம் என்றாலும் எவ்வளவு காலத்துக்கு இந்த நீராதாரம் நிலைத்தும் நீடித்தும் இருக்கும்? கேள்விக்குறியே! (பிறகு எத்தனாலையும் இறக்குமதி செய்ய வேண்டியதுதான்!).

நம்மைச் சுற்றியுள்ள, நம்மைவிடச் சிறிய நாடுகளில் எல்லாமும் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் எதற்காக இன்னமும் இவ்வளவு அதிக விலை?

வரிகளுடன் சேர்த்து எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு இவ்வளவு விலை கொடுத்துக் கொண்டிருக்கும் மக்கள், எத்தனால் கலக்காத, பழசு என்றாலும் தங்கள் வாகனங்களுக்குப் பாதிப்பில்லாத கலப்படமில்லா பெட்ரோலுக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் தரத் தயங்கப் போவதில்லை – அதுவும் இஎம்ஐ கட்டி வாங்கிய காரையும் இரு சக்கர வாகனங்களையும் பணயம் வைக்க வேண்டிய சூழலில்.

நுகர்வோர் அவரவர் வாகனங்களுக்கு ஏற்பத் தேவையான இ20, இ10, இ0 என விரும்புகிற எந்த வகை பெட்ரோலையும் நிரப்பிக் கொள்ள அனுமதிப்பதில் என்ன சிக்கல்? எதற்காக எல்லாருமே இ20-க்கே மாறியாக வேண்டும்? அதுவும் இந்தியா போன்றதொரு நாட்டில்? இதனால் யாருக்குப் பலன்?

மத்திய அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமான எத்தனால் தொழில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அண்மைக் காலத்தில்,  நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்திருப்பதாகத் தரவுகளுடன் சமூக ஊடகங்களில் செயற்பாட்டாளர்கள் தாளிக்கின்றனர். அல்லாமல் எத்தனால், பெட்ரோல், டீசல் பற்றியெல்லாம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிதானே பேச வேண்டும்? எதற்காக நிதின் கட்கரியே பேசுகிறார் என்றும் டென்ஷனாகிறார்கள்.

இதனிடையே, டீசலிலும் எத்தனால் கலக்க மேற்கொண்ட சோதனை முயற்சிகள்  தோல்வியுற்றுவிட்ட நிலையில் ஐசோபியூடனால் (இதுவும் கரும்பு, மக்காச்சோளம், கோதுமை போன்ற பயிர்களின் உதவியில் பெறப்படுவதுதான்) கலப்பதும் அதிகரிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் நிதின் கட்கரி (டீசல் விலை லிட்டர் ரூ. 100-க்கும் குறைவு, ஐசோபியூடனால் விலையோ லிட்டர் ரூ. 150! எதை, எதனுடன், எதற்காகக் கலப்பது? இதிலென்ன புத்திசாலித்தனம்? என்று கேட்பதும் சமூக ஊடக மக்கள்தான்).

‘க்ரோக்’ திரட்டித் தரும் தகவலின்படி இந்தியச் சாலைகளில் இன்றைய நிலவரப்படி, உத்தேசமாக, 4 கோடியிலிருந்து 5 கோடி கார்கள் (பெட்ரோல், டீசல், இயற்கை வாயு, மின்சாரம் உள்பட) ஓடிக் கொண்டிருக்கின்றன. பெட்ரோலில் இயங்கும் கார்கள்தான் மிகவும் அதிகம் – 50-லிருந்து 60 சதவிகிதம், சுமாராக 2 கோடியிலிருந்து 3 கோடி வரை.

மாருதி, ஹுண்டாய் தயாரிப்புகளில் மட்டுமே இ20-க்குப் பொருந்தாத முந்தைய தயாரிப்பு பெட்ரோல் வாகனங்கள் 80 லட்சங்களிலிருந்து 1.2 கோடி வரை இருக்கலாம். பிற நிறுவனங்களின் தயாரிப்புகளும் இருக்கின்றன.

இந்த கார்கள் எல்லாமும் இவற்றின் வடிவமைப்புக்குப் பொருந்தாத இ20 எத்தனால் கலப்பு பெட்ரோலை நிரப்பித் தொடர்ந்து இயக்கப்பட்டால், சில ஆண்டுகளில், அதிகபட்சம் ஐந்தாண்டுகளில் பழுதாகிப் பயனற்றுக் காயலான் கடைகளைச் சென்றடைவது தவிர்க்க இயலாது என்கிறார்கள் வாகன  மெக்கானிக்குகள்.

இவையன்றி, நாட்டில் சுமார் 26 கோடி இரு சக்கர வாகனங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன – எல்லாம் பெட்ரோலில்தான்.

இ20 எத்தனால் எஃபெக்ட்டில் கார், இரு சக்கர வாகனங்களைத் தொடர்ந்து, ஐசோபியூடனால் எஃபெக்ட்டில் லாரிகள், வேன்கள் எல்லாமும் இந்தப் பட்டியலில் வரப் போகின்றன. இதனால், என்னென்ன தொடர் விளைவுகள் நேரிடுமோ?

ஏதோ ஒரு 2 வீலரோ, காரோ வாங்கினோமா, இஎம்ஐ கட்டினோமா என்று போய்க் கொண்டிருந்த நடுத்தர மக்கள் வாழ்க்கையில் இப்போது இ20 என்ற பெயரில் எத்தனால் வந்து நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறது. சாமிகளா, கொஞ்சம் கருணை காட்டுங்க! நாங்களும் பிழைத்துப் போகிறோம்!

டெயில் பீஸ் : இந்தியாவைச் சுற்றிலும் இலங்கையில் தொடங்கி, வங்க தேசத்துக்கு நகர்ந்து, நேபாளத்தில் எதிரொலித்திருக்கிறது – இளைஞர்கள், அதிருப்தி, கோபம், வன்முறை, கலவரம், தீவைப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு, இடைக்கால அரசுகள்... என்ன பேட்டர்னாக இருக்கும் இது?

Summary

Regarding the plight of the middle class, who are affected by the mandatory use of E20 - 20 percent ethanol blended petrol...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com