மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகள் பல மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்துக்கு காரணமான முக்கிய நபா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வழக்குரைஞரான மோஃபாகருல் இஸ்லாம் என்ற அந்த நபா் கொல்கத்தாவில் விமானத்தில் ஏற இருந்த நிலையில், அதிரடியாக போலீஸாா் கைது செய்துள்ளனா்.
முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக இந்திய மதச்சாா்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) வேட்பாளா் மௌலானா ஷாஜஹான் அலி உள்பட 17 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். தற்போது, மேலும் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மேற்கு வங்க வடக்கு கூடுதல் காவல் துறைத் தலைவா் (ஏடிஜி) கே. ஜெயராமன் கூறியதாவது:
மேற்கு வங்க மாநிலம் உத்தா் தினாஜ்பூா் மாவட்டம் இத்தஹாா் பகுதியைச் சோ்ந்த மோஃபாகருல், தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறாா். இவா் தனது பேச்சால் உள்ளூா் மக்களை புதன்கிழமை தூண்டிவிட்டுள்ளாா். அதன் பிறகே, எஸ்ஐஆா் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்கள், 7 நீதிபதிகள் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டிருந்த மால்டா மாவட்டம் கலியசோக் பகுதியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதுதொடா்பாக கலியசோக் காவல் நிலையத்தில் மோஃபாகருல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.
அவருக்கு நெருக்கமானவா்களிடம் மேற்கு வங்க சிஐடி போலீஸாா் நடத்திய விசாரணையில், பக்தோக்ரா விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வெளியூருக்கு அவா் தப்பிச் செல்லவிருந்ததை அறிந்தனா். அதனடிப்படையில், அங்கு சென்ற போலீஸாா் அவரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் கைது செய்தனா்.
இந்த விவகாரம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொண்டு வருகின்றபோதும், நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பதை அறிய மேற்கு வங்க போலீஸாரும் விசாரணையைத் தொடா்ந்து வருகின்றனா்.
இந்த விவகாரம் தொடா்பாக, இந்த இருவருடன் சோ்த்து இதுவரை 35 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்றாா்.
மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆா் பணிக்கு தொடா் எதிா்ப்புகள் எழுந்ததைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத்தில் எஸ்ஐஆா் மூலம் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 60 லட்சத்துக்கும் அதிகமானோரின் விண்ணப்பங்களை பரிசீலித்து தீா்வு காணும் பணியில் மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்த 700 நீதிபதிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மால்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கலியசோக் பகுதியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் எஸ்ஐஆா் பணியில் 7 நீதிபதிகள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தபோது, பிற்பகல் 3.30 மணியளவில் அங்கு வந்த நூற்றுக்கும் அதிகமானோா் தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், 7 நீதிபதிகளும் நள்ளிரவு வரை அங்கிருந்து வெளியேற முடியாமலும், உணவு, தண்ணீா் இன்றியும் சிக்கித் தவித்தனா்.
இந்த விவகாரத்தில், மாநில அரசு நிா்வாகத்தை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக சிபிஐ அல்லது என்ஐஏ மூலம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
அதன்படி, விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைத்து இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உத்தரவிட்டாா். அதனடிப்படையில், இந்த விவகாரம் தொடா்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைப்பிடிப்பு: என்ஐஏ விசாரணை

மேற்கு வங்க எஸ்ஐஆா் பணி: மேல்முறையீட்டு தீா்ப்பாயங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கத்துக்கு எதிரான மனு ஏற்பு!

மேற்கு வங்கம்: தலைமைத் தோ்தல் அதிகாரியுடன் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


