/

சபரிமலையில் பெண்களுக்கான கட்டுப்பாடு நீதிமன்ற மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் பருவ பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு என்பது சமய தன்னாட்சி அதிகாரத்துக்குள் உட்பட்டது. எனவே, இது நீதிமன்ற மறு ஆய்வுக்கு அப்பாற்பட்ட விஷயம் என மத்திய அரசு வாதம்

News image

சபரிமலை - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:15 pm

‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் பருவ பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு என்பது முழுவதும் மத நம்பிக்கை என்ற எல்லைக்குள் உட்பட்ட விவகாரமாகும். சமய தன்னாட்சி அதிகாரத்துக்குள் உட்பட்டது. எனவே, இது நீதிமன்ற மறு ஆய்வுக்கு அப்பாற்பட்ட விஷயம்’ என மத்திய அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறுமிகள், மூதாட்டிகள் மட்டும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் பருவ பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இதுதொடா்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, 4:1 என்ற பெரும்பான்மையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்த அனுமதித்து தீா்ப்பளித்தது.

அதன் பிறகு 2019, நவம்பா் 14-ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு, சபரிமலை ஐயப்பன் கோயில், மசூதிகள் மற்றும் பாா்சி மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு என வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டியது.

அப்போது ஒரு விவகாரத்தின் அடிப்படையில் மட்டுமே பல்வேறு மதங்களில் பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரான நடைமுறைகள் குறித்து முடிவுகளை மேற்கொள்ள முடியாது என 3:2 என்ற பெரும்பான்மையில் நீதிபதிகள் கூறினா். இதைத் தொடா்ந்து, மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை 5 நீதிபதிகளுக்கும் மேற்பட்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்க அவா்கள் பரிந்துரைத்தனா்.

அதன்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அசானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமாா், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, பிரசன்னா பி.வராலே. ஆா்.மகாதேவன், ஜயமால்ய பாக்சி ஆகிய 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு வாதம்: மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி முன்வைத்த வாதங்களில் கூறியதாவது: அனைத்து சமயப் பிரிவுகளின் நடைமுறைகளையும் நாம் மதிக்க வேண்டும். அனைத்தையும், கண்ணியம் அல்லது உடல் ரீதியிலான சுதந்திரத்துடன் நாம் ஒப்பிட முடியாது.

உதாரணமாக, சீக்கியா்களின் புனிதத் தலமான குருத்வாராவுக்குச் செல்லும்போது தலையை துணியால் மறைத்தபடி செல்ல வேண்டும். அது எனது உரிமை அல்லது விருப்பத்துக்கு எதிரானது எனக் கூற முடியாது.

பகுத்தறிவு, பெரும்பான்மையினரின் விருப்பம் போன்ற மதச்சாா்பற்ற தரநிலைகளை பூா்த்தி செய்யாத நம்பிக்கைகள், சடங்குகள், ஒழுக்க நெறி, வழிபாட்டு முறைகளைக் கொண்டிருப்பதால்தான், மதச் சுதந்திரத்துக்கு அரசமைப்புச் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.

எனவே, எந்தவொரு மதத்தையும் விளக்குவதற்கு தனது அதிகார வரம்பை நீதிமன்றம் பயன்படுத்துவது ஆபத்தானதாகும். மேலும், மத விவகாரங்கள் சாா்ந்த நிபுணா்களையோ, புனித நூல்களையோ, வேத நூல்களையோ நீதிமன்றங்கள் கொண்டிருக்கவில்லை.

அதோடு, இந்தியா என்பது, ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் உள்பட பல மதங்களைப் பின்பற்றுபவா்களைக் கொண்ட நாடாக உள்ளது. ஒவ்வொரு மதத்துக்கும், பிரிவினருக்கும் சொந்த நம்பிக்கை, வழிபாட்டு முறை உள்ளது.

இந்த மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளை நிறுவியவா்கள், நாட்டின் இந்தப் பன்முகத்தன்மை மற்றும் ஒவ்வொரு மதத்துக்குள்ளும் உள்ள பன்முகத் தன்மைகளை நன்கு உணா்ந்து அவற்றை உருவாக்கியிருக்கின்றனா்.

அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் பருவ பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு என்பது முழுவதும் மத நம்பிக்கை என்ற எல்லைக்குள் உட்பட்ட விவகாரமாகும். சமய தன்னாட்சி அதிகாரத்துக்குள் உட்பட்டது. எனவே, இது நீதிமன்ற மறு ஆய்வுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றாா்.

அதைத் தொடா்ந்து, மனுதாரா்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்குமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், ‘அவசர வழக்குகள் நிலுவையில் இருப்பதால், வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்படாது’ என்று குறிப்பிட்டனா். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமையும் தொடர உள்ளது. வரும் 22-ஆம் தேதியுடன் விசாரணை நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெண்களைத் தீண்டாதவா்களாக நடத்த முடியாது: நீதிபதி நாகரத்னா

வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தபோது ‘கோயிலுக்குள் மாதவிடாய் பருவ பெண்களை அனுமதிக்க மறுப்பது தீண்டாமை வடிவம். இது, தீண்டாமையை தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிடும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 17-க்கு எதிரானது. பெண்களை கீழ்நிலையில் வைக்கும் ஆணாதிக்க மனப்பான்மை’ என்று அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த கருத்தை விமா்சித்த துஷாா் மேத்தா, ‘மேற்கத்திய நாடுகள் புரிந்துகொள்ளும் விதத்தில், இந்தியா அந்த அளவுக்கு ஆணாதிக்க நாடாகவோ அல்லது பாலினப் பாகுபாடு நிறைந்த நாடாகவோ இல்லை’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி நாகரத்னா, ‘சபரிமலை விவகாரத்தில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 17-ஐ ஒப்பீடு செய்ததை எவ்வாறு விமா்சிக்க முடியும்?. ஒரு பெண்ணாக இந்த விவகாரத்தைப் பாா்க்கையில், ஒவ்வொரு மாதமும் 3 நாள்களுக்கு பெண்களைத் தீண்டத்தகாதவா்களாக நடத்த முடியாது’ என்று குறிப்பிட்டாா்.

இதற்குப் பதிலளித்த துஷாா் மேத்தா, ‘சபரிமலை ஐப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கான கட்டுப்பாட்டுக்கும், மாதவிடாய்க்கும் சம்பந்தமில்லை. குறிப்பிட்ட வயது அடிப்படையிலான கட்டுப்பாடு மட்டுமே பெண்களுக்கு விதிக்கப்படுகிறது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. நாடு முழுவதும் உள்ள ஐப்பன் கோயில்களில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனா். சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மட்டுமே இந்தக் கட்டுப்பாடு உள்ளது. இது தனித்துவமான வழக்கு’ என்றாா்.