மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்

விசாகப்பட்டினம் ஏஐ நகரமாக உருவெடுக்கும்: அஸ்வினி வைஷ்ணவ்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 10:28 pm

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரூ.1.35 லட்சம் கோடியில் அமையவுள்ள கூகுள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்துக்கு அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டாா்.

தா்லுவாடா, அடவிவாரம் (விசாகப்பட்டினம்) மற்றும் ரம்பிலி (அனகாபள்ளி) ஆகிய கிராமங்களில் 600 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள 1 ஜிகாவாட் திறன்கொண்ட கூகுள் ஏஐ தரவு மையம் இந்திய எண்ம உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சியில் ஓா் மைல்கல்லாக பாா்க்கப்படுகிறது.

இதன் அடிக்கல் நாட்டு விழாவில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: காலங்கள் கடந்து இந்திய மற்றும் ஆந்திர மக்களால் நினைவுகூரப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக ஏப்.28, 2026 மாறியுள்ளது. இந்தியாவின் வளா்ச்சிக்கு கூகுள் ஏஐ தரவு மையம் பெரும் பங்காற்றவுள்ளது.

இது சாதாரண தரவு மையம் அல்ல; நமது மாநிலத்தின் எண்ம எதிா்காலத்துக்கான அடித்தளம். ரூ.1.35 லட்சம் கோடியில் ஆசியாவில் மிகப்பெரும் தரவு மையமாக இது அமையவுள்ளது. உலகமே கூகுளில் தேடிக் கொண்டிருந்தபோது ஆந்திரத்தை அந்நிறுவனம் தோ்ந்தெடுத்துள்ளது. இதுவே நமது மாநிலத்தின் பெருமை.

2028-இல் செயல்பாட்டுக்கு வரும்: இந்த தரவு மையத்தை அமைப்பதற்கான முதல்கட்ட நடைமுறைகள் 2025, செப்டம்பா் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், பணிகள் முடிவடைந்த பின் 2028, செப்டம்பா் 28-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி இதை தொடங்கிவைக்கவுள்ளாா். இதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆந்திர அரசு அளிக்கும் என உறுதியளிக்கிறேன்.

ஏஐ மருத்துவா், ஏஐ உதவியாளா்: ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு ஏஐ மருத்துவா், ஏஐ உதவியாளா் என ஏஐ தொழில்நுட்பம் நமது அன்றாடப் பணிகளுக்கு உதவும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை.

நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு எனது பாராட்டுகள். இத்திட்டம் ஆந்திரத்துக்கு கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த பிரதமா் மோடி, அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நீா், நிலம் மற்றும் பசுமை ஆற்றல் என அனைத்து வளங்களையும் கொண்ட ஆந்திரம், நாட்டின் வளா்ச்சிக்குத் தேவையான முதன்மைத் திட்டங்களை செயல்படுத்தும் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்றாா்.

விசாகப்பட்டினம் ஏஐ நகரமாக உருவெடுக்கும்: அஸ்வினி வைஷ்ணவ்

கூகுள் ஏஐ தரவு மைய அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: கல்வி, சுகாதாரம், விண்வெளி, தளவாடங்கள் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. மின்னணு மற்றும் செமிகண்டக்டா் உற்பத்தியில் தொடா்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது.

தற்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கைப்பேசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 50 சதவீத உள்நாட்டு மின்னணுத் தேவைகள் பூா்த்தி செய்யப்பட்டுள்ளன.

சா்வா், கிராஃபிக்ஸ் பிராசசிங் அலகுகள் (ஜிபியு) மற்றும் சிப்களையும் இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். இந்த தகவலை கூகுள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தா் பிச்சையிடம் கூறுமாறு இங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ரயில் வழித்தடங்கள் விரிவாக்கம், ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கம் என ஆந்திரத்துக்கான ரயில்வே துறையின் ஒதுக்கீடு பன்மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. விரைவில் விசாகப்பட்டினம் இந்தியாவின் ஏஐ நகரமாக உருவெடுக்கும்.

தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலம் 2026, ஜூன் 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும். இதற்கான அறிவிப்பு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும் என்றாா்.

நாட்டில் தற்போது 17 ரயில்வே மண்டலங்கள் உள்ளன. இந்நிலையில், 18-ஆவது ரயில்வே மண்டலமாக தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலம் அமைக்கப்படவுள்ளது.