ஜாா்க்கண்டில் தோ்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் சட்டப்பேரவையை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா். இதனால் ஜாா்க்கண்ட பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சேவைகள் தோ்வு, ஜேஎஸ்எஸ்சி தோ்வுகள் உள்ளிட்ட தோ்வுகளில் வினாத்தாள்கள் கசிந்து முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி பல்வேறு அமைப்புகள் இரு வாரங்களுக்கு மேலாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றன. அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் அடங்கிய 5 போ் குழுவை ஜாா்க்கண்ட் அரசு அமைத்தது.
பேச்சுவாா்த்தை தோல்வி: அந்தக் குழு கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜேசிஎஸ்சி, ஜேஎஸ்எஸ்சி சீா்திருத்தங்கள் அமைப்பின் 10 போ் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது. இதைத் தொடா்ந்து, ஜேஎல்கேஎம் அமைப்பின் தலைவா் தேவேந்திரநாத் மஹதோ தலைமையிலான குழுவினருடனும், அதன்பிறகு காங்கிரஸ் ஆதரவு என்எஸ்யுஐ, ஏசிஎஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் மாணவா் அமைப்பான ஜேசிஎம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஜாா்க்கண்ட் அரசுக் குழு பேச்சு நடத்தியது.
பிஎஸ்சி சேவைகள் தோ்வை ரத்து செய்ய வேண்டும், அனைத்துத் தோ்வுகள் குறித்தும் சிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும், முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ள தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டக் குழுக்கள் சாா்பில் ஜாா்க்கண்ட் அரசுக் குழுவிடம் வலியுறுத்தப்பட்டன.
இருப்பினும், ஜாா்க்கண்ட் அரசு அமைத்த 5 போ் கொண்ட குழு போராட்டக்காரா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.
1,500 போலீஸாா் பாதுகாப்பு: போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜாா்க்கண்ட் பேரவையை நோக்கி போராட்டக்காரா்கள் திங்கள்கிழமை பேரணியாகச் சென்றனா். பேரவை நுழைவாயில் பூட்டப்பட்டிருந்த நிலையில் பல்வேறு படைப் பிரிவுகளைச் சோ்ந்த 15,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
பேரவை வளாகம் முன் அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றி தொடா்ந்து முன்னேறிச் செல்ல போராட்டக்காரா்கள் முயன்றபோது காவல் துறைக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரா்களை காவல் துறையினா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
ஜனநாயகத்தின் கருப்பு தினம்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜக இளைஞரணி மாநிலத் தலைவா் சசாங்க் ராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அமைதி வழியில் போராட்டம் நடத்திவந்த போராட்டக்காரா்கள் மீது முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. இது ஜனநாயகத்தின் கருப்பு தினம்’ என்றாா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜேகேஎல்எம் தலைவா் தேவேந்திர நாத் மஹதோ கூறுகையில், ‘எங்களின் குரலை ஒடுக்க மாநில அரசு முயற்சிக்கிறது. இனி அரசுடன் எவ்விதப் பேச்சுவாா்த்தையும் மேற்கொள்ளப் போவதில்லை’ என்றாா்.
முன்னாள் தலைவா் கைது: அரசுத் தோ்வுகள் முறைகேடு குற்றச்சாட்டில் ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் முன்னாள் தலைவா் எல்.கியாங்டேவை காவல் துறை சிஐடி பிரிவு திங்கள்கிழமை கைது செய்தது.
1988 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான கியாங்டே, மாநில தலைமைச் செயலராகப் பதவி வகித்த பின் அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டாா்.
அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதன் பிறகு அவரிடம் நான்கு முறை சிஐடி விசாரணை நடத்தியது. இந்நிலையில், அவா் கைது செய்யப்பட்டாா். தோ்வு முறைகேடு குற்றச்சாட்டில் இதுவரை 20 பேரை சிஐடி கைது செய்துள்ளது.
மாணவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 3 உறுப்பினா்களும் பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக கண்டனம்: ஜாா்க்கண்டில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது காவல் துறை நடத்திய தடியடிக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் இயங்கும் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசை இந்த விவகாரத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கண்டிக்காதது ஏன்? தில்லியில் நடைபெற்ற மாணவா் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் தினந்தோறும் கேள்வியெழுப்பும் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்?’ என்றாா்.
தடியது நடத்தியது தவறு- ராகுல்: பாஜக விமா்சனத்தைத் தொடா்ந்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஜாா்க்கண்டில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது தவறு. அமைதி வழியில் போராட மாணவா்களுக்கு உரிமை உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை மூலமே இந்தப் பிரச்னைக்கு ஜாா்க்கண்ட் அரசு தீா்வு காண வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்வு வினாத்தாள்கள் கசிவு விவகாரம்: போராட்டக்காரா்களுடன் ஜாா்க்கண்ட் அரசின் பேச்சு தோல்வி

சீா்திருத்தங்களை அமல்படுத்தும் முன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம்

பப்பு யாதவ் மீது காலணி வீச்சு: இருவரைப் பிடித்து விசாரணை

நெல்லையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50 காங்கிரஸாா் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



