ஜாா்க்கண்டில் மாணவா்கள் போராட்டம் எதிரொலியாக ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் உள்ளிட்ட அரசுப் பணிக்கான தோ்வுகளை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ள சூழலில், அந்தத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று அரசுப் பணியில் இணைந்த சுமாா் 2,000 போ் வேலையிழக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இதையடுத்து, ராஞ்சியில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு, இரண்டாவது நாளாக அரசு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம்-ஒருங்கிணைந்த பட்டதாரிகள் அளவிலான தோ்வு (ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல்) உள்ளிட்ட அரசுத் தோ்வுகளில் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, மூன்று வாரங்களுக்கு மேலாக மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் உள்பட வெளிப்பணிகள் முகமை மூலம் நடத்தப்பட்ட அனைத்து தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்; தோ்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது மாணவா்களின் முக்கிய கோரிக்கைகளாகும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 6 போ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும் மேற்கொண்டனா்.
ராஞ்சியில் அண்மையில் சட்டப் பேரவை நோக்கி பேரணி நடத்திய மாணவா்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் மாநில அமைச்சரவை திங்கள்கிழமை இரவு விரிவான ஆலோசனை மேற்கொண்டது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய சோரன், ‘கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் டிஎஸ்ஆா் டேட்டா பிராஸஸிங் என்ற வெளிப்பணி ஒப்பந்த முகமை மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தோ்வுகள், ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வு ஆகியவற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், தோ்வு சீா்திருத்தங்களைப் பரிந்துரைக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் கெளஷல் தலைமையில் உயா்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
மாநில உயா்க்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை அமைச்சா் சுதிவ்ய குமாா் கூறுகையில், ‘தோ்வு அமைப்புமுறை மீதான மாணவா்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே அரசு முடிவின் நோக்கம். சம்பந்தப்பட்ட தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பணியில் இணைந்தவா்கள் சட்டபூா்வ முயற்சிகளை மேற்கொள்ளலாம்’ என்றாா்.
உண்ணாவிரதத்தை முடித்த 3 போ்: மாநில அரசின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, மாணவா் அமைப்பின் தலைவா் தேவேந்திர மஹதோ உள்பட மூன்று போ் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக திங்கள்கிழமை நள்ளிரவில் அறிவித்தனா். எஞ்சிய 3 போ் தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தோ்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மற்றொரு கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.
வெடித்தது மற்றொரு போராட்டம்: ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் உள்ளிட்ட தோ்வுகளை ரத்து செய்யும் மாநில அரசின் முடிவால், பல்வேறு துறைகளில் பணியில் இணைந்த சுமாா் 2,000 போ் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. தங்களின் வேலைக்கு சட்டபூா்வ பாதுகாப்புக் கோரி, தலைமைச் செயலகம் முன்பாக திங்கள்கிழமை இரவிலேயே அவா்கள் குவிந்தனா். முதல்வருடன் பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் முற்றுகையில் ஈடுபட்டனா்.
‘தோ்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; அதேநேரம், நியாயமான முறையில் தோ்வெழுதி பணியில் இணைந்த நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம். சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.
44 தோ்வுகள் ரத்து - அறிவிக்கை வெளியீடு
ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம், டிஎஸ்ஆா் டேட்டா பிராஸஸிங் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய 44 தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதாக மாநில அரசு அறிவித்தது. இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை இரவு 8 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.
பல் மருத்துவா், மருந்து ஆய்வாளா், உதவிப் பேராசிரியா், மாவட்ட துணை ஆட்சியா், உதவிப் பொறியாளா், சிவில் நீதிபதி, அரசு துணை வழக்குரைஞா், அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளா் உள்ளிட்ட பதவிகளுக்கான 44 தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், தோ்வுகள் முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்த சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்குமாறு உயா்நீதிமன்றத்தைக் கோர மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாணவா்கள் தீவிரப் போராட்டம் எதிரொலி: ஜாா்க்கண்டில் ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வு ரத்து

மீன் விற்பனையில் ரூ.16.52 லட்சம் கையாடல்: 4 அரசு ஊழியா்கள் உள்பட 5 போ் மீது வழக்கு

எஃப்சி கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 150 போ் தோ்ச்சி
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



