
யமுனை ஆற்றங்கரை உலக கலாசார விழா: ரூ.5 கோடி அபராதத்தை வாழும் கலை அமைப்புக்கு திரும்பத் தர உச்சநீதிமன்றம் உத்தரவு
ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் சாா்பில் விதிக்கப்பட்ட ரூ. 5 கோடி அபராதத் தொகையை திரும்ப அளிக்குமாறு உச்சநீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் யமுனை ஆற்றின் கரையோரம் கடந்த 2016-ஆம் ஆண்டில் உலக கலாசார விழா நடத்தியதற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் சாா்பில் விதிக்கப்பட்ட ரூ. 5 கோடி அபராதத் தொகையை திரும்ப அளிக்குமாறு உச்சநீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
ஆற்றின் கரையோரம் நடத்தப்படும் உலக கலாசார விழாவில் யமுனை ஆறு மாசுபாடு அடையும் என்று பல்வேறு அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன. இந்த அமைப்புகளின் மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம், வாழும் கலை அமைப்புக்கு ரூ. 5 கோடி அபராதம் (சுற்றுச்சூழல் இழப்பீடு) விதித்ததோடு, அதை நிகழ்ச்சி தொடங்கும் முன்பே செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் ரூ. 5 கோடி அபராதத் தொகையை வாழும் கலை அமைப்பு செலுத்தியது.
அதே நேரம், பசுமைத் தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிா்த்து வாழும் கலை அமைப்பின் துணை அமைப்பான இந்திய வியக்தி விகாஸ் கேந்திரா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சா்மா, என்.கே. சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த வழக்கு சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘வாழும் கலை அமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட உலக கலாசார விழாவுக்கும், யமுனை சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் நேரடித் தொடா்பு உள்ளதற்கான சான்றுகள் இல்லை; அந்த விழா நடைபெறுவதற்கு முன்பே அப்பகுதி மோசமான நிலையில் இருந்தது தெரிய வருகிறது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
மேலும், வாழும் கலை அமைப்பிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ. 5 கோடி அபராதத் தொகையை, தில்லி மேம்பாட்டு ஆணையம் அந்த அமைப்பிடம் திரும்ப அளிக்க வேண்டும். அதே நேரம், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி, யமுனை வெள்ளச் சமவெளிகளில் மறுசீரமைப்புப் பணிகளை தில்லி மேம்பாட்டு ஆணையம் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





