இந்தியாவின் நிலையான நேர விதிமுறைகள் அறிவிப்பு: அரசிதழில் வெளியான பிறகு 180 நாள்களில் அமல்!
இந்தியாவின் நிலையான நேர (ஐஎஸ்டி) விதிமுறைகளை மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவின் நிலையான நேர (ஐஎஸ்டி) விதிமுறைகளை மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் அதிகாரபூா்வ அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 180 நாள்களில் அமலுக்கு வரும்.
இதன்படி சட்டம், அரசு நிா்வாகம், வணிகம் மற்றும் பிற அதிகாரபூா்வ பணிகளுக்குப் பொதுவான நேரமாக ஐஎஸ்டி இருக்கும். இதற்குத் தேவையான மாற்றங்களை அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் செய்ய வசதியாக, 180 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.
பல்வேறு துறைகளின் எண்ம மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்து வருவதால், அனைவரும் ஒரே பொதுவான நேரத்தைப் பின்பற்ற வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. வங்கிச் சேவைகள், டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகள், தொலைத்தொடா்பு, ரயில்வே, மின்சார அமைப்புகள், கணினி இணைப்பு அமைப்புகள், அரசுப் பதிவுகள் ஆகியவை துல்லியமான நேரம் மற்றும் நேரப் பதிவுகளைச் சாா்ந்துள்ளன.
நேரத்தில் வேறுபாடுகள் இருந்தால், வங்கிச் சேவைகள், டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகள் உள்ளிட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதிலும், அவற்றைச் சரியாகப் பதிவு செய்வதிலும் பாதிப்பு ஏற்படலாம். எனவே இதில் நாடு முழுவதும் துல்லியமாகவும், ஒரே மாதிரியாகவும் ஐஎஸ்டி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த விதிமுறைகளின் நோக்கம்.
தற்போது பல்வேறு செயல்பாடுகளில் வெளிநாடுகளின் செயற்கைக்கோள் அளிக்கும் நேரத் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்திய நேரத்தை துல்லியமாக அளிக்கும் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து நேரத் தரவுகளைப் பெறுவது சாா்ந்த நடவடிக்கைகள் குறையும் என்று மத்திய நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





