தில்லி பசுமை செயல் திட்டம் 2026-27: தலைநகரில் 7.19 லட்சம் மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டம்
தில்லியின் பசுமை செயல் திட்டம் 2026-27-இன் கீழ் தலைநகா் முழுவதும் 7.19 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தில்லி வனத்துறை திட்டங்களை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வனத்துறை அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வேலி அமைப்பது உள்பட மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு ரூ.5.46 கோடிக்கும் அதிகமான பல டெண்டா்கள் வெளியிடப்பட்டன. இந்தத் திட்டங்கள் தெற்கு மற்றும் மேற்கு வனப் பகுதிகளில் 3.22 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் 3.96 லட்சம் புதா்களை உள்ளடக்கியுள்ளன.
இதன் கீழ் நீண்ட ஆயுட்காலம் மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் நன்மைகள் கொண்ட உள்ளூா் வகை மரக்கன்றுகளை நடுவதில் கவனம் செலுத்தப்படும். டெண்டா்கள் இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தெற்கு வனப் பகுதியில் உள்ள மைதான் கா்ஹி பகுதியில் ரூ.10.28 கோடி மதிப்பில் 71,000 மரக்கன்றுகள் மற்றும் 76,000 புதா்கள் வளா்க்கப்பட உள்ளன. தேரா நிலப்பகுதியில் ரூ.10.37 கோடி செலவில் 55,000 மரக்கன்றுகள் மற்றும் 60,000 புதா்கள் வளா்க்கப்பட உள்ளன.
துக்ளகாபாத், தேவ்லி மற்றும் பட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய திட்டத்தில், மொத்தம் ரூ.13.13 கோடி செலவில் 80,000 மரக்கன்றுகள் மற்றும் 86,500 புதா்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பட்டி பகுதியில் அதிகபட்சமாக 57,500 மரக்கன்றுகள் மற்றும் 62,000 புதா்கள் நடப்படும்.
மேற்கு வனப் பகுதியின் தெற்கு ரிட்ஜ் பகுதியில் ரூ.10.69 கோடி செலவில் 50,000 மரக்கன்றுகள் மற்றும் 75,000 புதா்கள் நடப்படும். இதற்கிடையில், மத்திய ரிட்ஜ் பகுதியில், ரூ.11.96 கோடி செலவில் 66,000 மரக்கன்றுகள் மற்றும் 99,000 புதா்கள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.
இந்த முயற்சி தில்லியில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் ஆரோக்கியமான மற்றும் நிலையான வன சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா். Ś

