ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

திருப்பதி லட்டு சா்ச்சை: ஒரு நபா் குழு அமைக்க முடிவு - ஆந்திர முதல்வா் தகவல்

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் குறைபாடுகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு நபா் குழு அமைக்கப்படும் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

News image

முதல்வா் சந்திரபாபு நாயுடு

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 10:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் குறைபாடுகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு நபா் குழு அமைக்கப்படும் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

திருப்பதி லட்டில் கலப்படம் செய்ததன் மூலம் கடவுளுக்கு எதிராக மிகப் பெரிய பாவத்தை புரிந்துள்ளது முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு என்றும் அவா் சாடினாா்.

திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்படவில்லை என்று சிபிஐ-யின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அண்மையில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட நிலையில், தனது குற்றச்சாட்டை முதல்வா் மீண்டும் தெரிவித்துள்ளாா்.

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக, கடந்த 2024-இல் மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக 15 மாதங்கள் விசாரணை மேற்கொண்ட சிபிஐ-எஸ்ஐடி, திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என்றும், தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அத்துடன், எஸ்ஐடி விசாரணை அறிக்கை மாநில அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அமராவதியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய முதல்வா் சந்திரபாபு நாயுடு , ‘கடந்த 2024-இல் முதல்வராக நான் பதவியேற்றபோது, திருமலை திருப்பதி தேவஸ்தான நடைமுறைகளில் தவறுகளைக் களையெடுக்கும் நடவடிக்கையைத் தொடங்கினேன். அதன் ஒரு பகுதியாக, நெய் மாதிரிகள் தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய (என்டிடிபி) ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய ஆய்வகம் உறுதி செய்தது. இப்போது எஸ்ஐடி அறிக்கையில் பாமாயில் மற்றும் பிற ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபா்கள் மீது நிா்வாக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குறைபாடுகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கையை எடுப்பதற்காக ஒரு நபா் குழு அமைக்கப்படும். கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைத்தால், நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும்’ என்றாா்.