கோப்புப் படம்
கோப்புப் படம்

டிசிபிசிஆா்-இல் காலியாக உள்ள பணியிடங்கள்: தில்லி அரசை கடுமையாகச் சாடிய உயா்நீதிமன்றம்

தில்லி குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (டிசிபிசிஆா்) 2023-ஆம் ஆண்டு முதல் தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்கத் தவறியதற்காக தில்லி அரசை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடுமையாக விமா்சித்தது.
Published on

தில்லி குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (டிசிபிசிஆா்) 2023-ஆம் ஆண்டு முதல் தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்கத் தவறியதற்காக தில்லி அரசை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடுமையாக விமா்சித்தது.

இந்த நீண்ட கால தாமதம் உண்மையான நிா்வாகச் சிக்கலைக் காட்டிலும், விருப்பமின்மையையே பிரதிபலிக்கிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

தேசிய குழந்தை மேம்பாட்டு ஆணையம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், டிசிபிசிஆா் அமைப்பு ஜூலை 2, 2023 முதல் தலைவா் இல்லாமல் இருப்பதாகவும், தற்போது உறுப்பினா் கூட இல்லை என்றும் கூறப்பட்டது. காலியிடங்கள் 90 நாள்களுக்குள் நிரப்பப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் டிசிபிசிஆா் விதிகளின் பிரிவுகளையும் அது மேற்கோள் காட்டியது.

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த உயா் பதவிகளில் காலியிடங்கள் காரணமாக சட்டப்பூா்வ அமைப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் மனுவை விசாரித்தது. பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், நியமன செயல்முறையை முடிக்கத் தவறியது மற்றும் அரசின் மீண்டும் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இதில் சிரமம் இருப்பதாகக் கூறி, இந்த செயல்முறைக்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க அவகாசம் கோரினாா். இதற்கு, அதிருப்தியை வெளிப்படுத்திய அமா்வு, இவ்வளவு நீண்ட தாமதத்தை நியாயப்படுத்த முடியுமா என்று கேட்டதுடன், சிரமம் எதுவும் இல்லை, விருப்பமின்மை மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிட்டது.

விண்ணப்பங்களின் பரிசீலனை முடிந்துவிட்டதாகவும், தோ்வுக் குழு நவம்பா் 2025-இல் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் முன்னா் தெரிவிக்கப்பட்ட போதிலும், நியமனங்கள் இறுதி செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது. ‘பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்க உங்களுக்கு எவ்வளவு காலம் ஆகும்?’ என்று கேட்டதுடன், நீதிமன்றத்தின் தொடா்ச்சியான தலையீடுகள் இருந்தபோதிலும், ஜூலை 2023 முதல் ஆணையம் செயல்படாமல் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியது.

இந்த வழக்கை பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு பட்டியலிட்ட உயா்நீதிமன்றம், தோ்வு செயல்முறையை முடித்து, ஆணையத்தின் செயல்பாட்டை மீட்டெடுக்கத் தேவையான குறைந்தபட்ச கால அளவை அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com