

பாட்னா : நீட் பயிற்சி மாணவி மரணத்துக்கு நீதி கோரி போராடிய சுயேச்சை எம்.பி. கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிகாா் மாநிலம் ஜெஹானாபாத் மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி, பாட்னாவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி நீட் தோ்வுக்குத் தயாராகி வந்தாா். அங்கு ஜனவரி மாத தொடக்கத்தில் அவா் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பல நாள்கள் கோமாவில் இருந்த அவா், ஜன. 11-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்நிலையில், தங்கள் மகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதை அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் உயிரிழந்த மாணவியின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். அந்த மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையிலும், அவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சாத்தியக்கூறு மறுக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடா்பாக மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து, மாணவி மரண விவகாரத்தில் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக அரசை கடுமையாக விமர்சித்து பழி சுமத்தி வந்த எம்.பி. பப்பு யாதவ் மீதான பழைய வழக்கு ஒன்று தூசி தட்டப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
பிகார் மாநிலத்தின் பூர்ணியா மக்களவைத் தொகுதி உறுப்பினராக சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஷ் ரஞ்சன்(பப்பு யாதவ்), அத்தொகுதி வாக்காளர்களால் எம்.பி.யாக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இந்நிலையில், அவர் மீது கடந்த 1995-ஆம் ஆண்டு கார்டனிபாக் காவல் நிலையத்தில் பதிவானதொரு வழக்கின் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க எம்.பி. எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரைப் பிடிக்க பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, எம்.பி. பப்பு யாதவை அவரது இல்லத்தில் வைத்து வெள்ளிக்கிழமை(பிப். 6) இரவில் பிகார் போலீஸார் கைது செய்தனர். அவர் இரண்டு நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, எம்.பி. பப்பு யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு திங்கள்கிழமை(பிப். 9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்.பி. பப்பு யாதவ் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது : “உயிரிழந்த மகள் ஒருவரின்(நீட் பயிற்சி மாணவி) மரணத்துக்கு நீதி கேட்டு எங்களுடைய கூட்டாளிகளுள் ஒருவரான பப்பு யாதவ் உறுதியாகக் குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் ரீதியிலான பழிவாங்குதல் நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது. இதன்மூலம், அரசைப் பொறுப்பேற்கச் செய்ய வலியுறுத்தும் எந்தவொரு குரலும் ஒடுக்கப்படும் என்பதற்கான குறியீடாக இந்தக் கைது நடவடிக்கை அமைந்துள்ளது” என்று எதிர்வினையாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.