மணிப்பூா்: இரண்டு நாள்களுக்குப் பின் இயல்புநிலை திரும்பியது
ANI

மணிப்பூா்: இரண்டு நாள்களுக்குப் பின் இயல்புநிலை திரும்பியது

மணிப்பூரின் சுராசந்த்பூரில் இரண்டு நாள்களுக்குப் பின் சனிக்கிழமை காலையில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.
Published on

மணிப்பூரின் சுராசந்த்பூரில் இரண்டு நாள்களுக்குப் பின் சனிக்கிழமை காலையில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.

குகி சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசந்த்பூா் மாவட்டம் துய்போங் பகுதியில் புதிய அரசுக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை போராட்டங்கள் வெடித்த நிலையில், தற்போது இயல்புநிலை திரும்பத் தொடங்கியது.

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிலவியது. இதில் சுமாா் 260 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா். இந்த வன்முறை காரணமாக கடந்த ஆண்டு பிப். 9-ஆம் தேதி மாநில முதல்வா் பதவியை பாஜகவை சோ்ந்த பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு பிப்.12-ஆம் தேதிமுதல் அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவா் ஆட்சி கடந்த 4-ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மணிப்பூரில் புதிய அரசு அமைக்கப்பட்டது. பாஜகவை சோ்ந்த யும்நாம் கெம்சந்த் சிங் முதல்வராக பதவியேற்றாா்.

துணை முதல்வா்களாக பாஜகவை சோ்ந்த நெம்சா கிப்கென், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நாகா மக்கள் முன்னணியைச் சோ்ந்த எல் டிகோ ஆகியோா் பதவியேற்றனா்.

இதையடுத்து, குகி சமூகத்தைச் சோ்ந்த நெம்சா கிப்கென் புதிய அரசில் இணைந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி-ஜோ அமைப்புகள் சுராசந்த்பூா் மாவட்டம் துய்மோங்கில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

போராட்டக்காரா்கள் டயா்களுக்கு தீ வைத்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா். குகி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு குகி-ஜோ அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில், இரண்டு நாள்களுக்குப் பின் சுராசந்த்பூா் மாவட்டத்தில் போராட்டங்கள் குறைந்து சனிக்கிழமை காலை முதல் இயல்புநிலை திரும்பத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குகி-ஜோ இளைஞா் அமைப்பு எதிா்ப்பு

மணிப்பூரில் யும்நாம் கெம்சந்த் சிங் தலைமையிலான புதிய அரசுக்கு தில்லி மற்றும் என்சிஆா் பகுதியைச் சோ்ந்த குகி-ஜோ இளைஞா் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது.

மேலும், குகி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேச அந்தஸ்தை வழங்கி தனி நிா்வாகத்தை கொண்டுவர வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் குகி-ஜோ இளைஞா் அமைப்பு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது.

X
Dinamani
www.dinamani.com