

லக்னௌ : உத்தரப் பிரதேசத்தில் ஆளுநர் உரைக்கு எதிராக கடும் விமர்சனத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் சுமத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று(பிப். 9) தொடங்கியது. சுமார் 30 நிமஷங்கள் நீடித்த ஆளுநர் ஆனந்திபென் படேலின் உரையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் சாதனைகள் பற்றிய குறிப்புகளே இடம்பெற்றிருந்ததாக எதிர்க்கட்சிகளான சமாஜவாதி கட்சியும், காங்கிரஸும் விமர்சித்து அமளியில் ஈடுபட்டன.
ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட விஷயங்களை விமர்சித்து உ.பி. சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஷ்ரா செய்தியாளர்களுடன் பேசுகையில், “55 பக்க ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான குறிப்புகளும் உறுதிமொழிகளெல்லாம் பாஜகவால் வாதிடப்படும் பொய்ப்புழுகள்களே.
உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க காலத்துக்கும் மேல் ஆளுநராக பதவி வகித்த ஆனந்திபென், இங்கு பாஜக அரசின் மக்களுக்கெதிரான கொள்கைகளைப் பற்றி பார்த்திருப்பார். இதன் காரணமாகவே, அவர் தமது உரையில் அரசியல் சம்பிரதாயத்துக்காக சில பக்கங்களை மட்டும் பார்த்துப் படித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் சாதி, மதத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை. இங்கு, குற்றங்கள் அதிகரித்துவிட்டன. ஊழல் 10 மடங்கு அதிகரித்துவிட்டது.
காவல் துறையில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் தங்களுக்குத்தாமே புகழாரம் சூட்டி அழகு பார்க்கும் விஷயங்களில் இந்த அரசு கவனம் செலுத்துகிறது.
அரசு வேலைகள் காலியாக இருந்தாலும், அவ்விடங்களுக்கு இளைஞர்களை பணியமர்த்தாமல், அவுட்-சோர்ஸிங் முறையில் அரசு ஆள்களை நிரப்புகிறது. இதன்மூலம், இளைஞர்களின் எதிர்காலத்துடன் அரசு விளையாடுகிறது.
பாஜக அரசின் பொய்களால் மக்கள் துவண்டு போயுள்ளனர். பாஜகவின் வெற்று அரசியலைப் பற்றி குழந்தைகளுக்குக்கூட தெரிந்திருக்கிறது. 2027இல் பாஜக வெளியேற்றப்படும் என்பது உறுதியாகிவிட்டது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.