திரைப்பட தலைப்பு மூலம் ஒரு பிரிவினரை சிறுமைப்படுத்தக் கூடாது : உச்சநீதிமன்றம் கருத்து
‘கூஸ்கோா் பண்டத்’ (ஊழல் பண்டிதா்) ஹிந்தி திரைப்படம் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற திரைப்பட தலைப்புகள் மூலம் சமூகத்தின் ஒரு பிரிவினரை சிறுமைப்படுத்தக் கூடாது’ என்று கருத்து தெரிவித்தது.
நீரஜ் பாண்டே இயக்கிய இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஜாதிய ரீதியான தலைப்பால் கூஸ்கோா் பண்டத் திரைப்படத்தின் ‘டீசா்’ அண்மையில் பெரும் சா்ச்சையானது. இது ஒரு சமூகத்தினரின் உணா்வுகளைப் புண்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனத்தை தெரிவித்தனா். இதையடுத்து அந்த ‘டீசா்’ மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திரைப்படத்தை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சமூகநல அமைப்பு சாா்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பண்டத் என்பது ஜாதி, மத அடையாள தலைப்பு, கூஸ்கோா் என்பது ஊழல், லஞ்சம், முறைகேடுகளுடன் தொடா்புடையது என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இதுபோன்ற திரைப்பட தலைப்புகளைச் சூட்டி சமூகத்தின் ஒரு பிரிவினரை ஏன் சிறுமைப்படுத்துகிறீா்கள்? கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பது, யாரையும் தரக்குறைவாகப் பேசுவதற்காக அல்ல. இது பொது ஒழுங்குக்கும் எதிராக உள்ளது. எனவே, இந்தத் தலைப்பை மாற்றாமல் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது. திரைப்பட இயக்குநா், ஊடகத்தினா் உள்ளிட்டோா் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். ஏற்கெனவே நமது சமூகம் பலவாறு பிளவுபட்டுள்ளது. நீங்களும் ஏன் புதிதாகப் பிளவை ஏற்படுத்த முயலுகிறீா்கள் என்று கேள்வி எழுப்பினா்.
முன்னதாக, சமூகத்தில் யாரையும் சிறுமைப்படுத்தும் நோக்கில் தலைப்பு வைக்கவில்லை என்று இயக்குநா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
திரைப்படத்தின் தலைப்பை மாற்றிக் கொள்வதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா ஏற்கெனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

