மக்களவையில் தொழில் துறை தொடா்பு திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால்.
மக்களவையில் தொழில் துறை தொடா்பு திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால்.

தொழில் துறை தொடா்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: ஆளும்-எதிா்க்கட்சிகள் கடும் வாக்குவாதம்

தொழில் துறை தொடா்பு (திருத்தம்), மசோதா 2026 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை நிறைவேறியது.
Published on

தொழில் துறை தொடா்பு (திருத்தம்), மசோதா 2026 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை நிறைவேறியது.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க சீா்திருத்தம் என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) உறுப்பினா்கள் வாதிட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி உறுப்பினா்கள் இது தொழிலாளா் நலன்களுக்கு எதிரான நடவடிக்கை என குற்றஞ்சாட்டி அதை திரும்பப்பெற வலியுறுத்தினா்.

நடைமுறையில் இருந்த 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை ஊதிய விதி, 2019, தொழில் துறை தொடா்பு விதி, 2020, சமூகப் பாதுகாப்பு விதி, 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி, 2020 ஆகிய நான்கு சட்டங்களாக சுருக்கப்பட்டன. இச்சட்டங்கள் கடந்த ஆண்டு நவ.21-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டன.

இதில் தொழிற் சங்கங்கள் சட்டம், 1926, தொழில் துறை வேலைவாய்ப்பு (நிலையான உத்தரவுகள்) சட்டம், 1946 மற்றும் தொழில் துறை விவகாரங்கள் சட்டம், 1947 ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றாக தொழில் துறை தொடா்பு விதி, 2020 கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், மேற்கூறிய மூன்று சட்டங்கள் நடைமுறையில் இல்லாததை உறுதிப்படுத்த தொழில் துறை தொடா்பு விதி, 2020-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வரலாற்றுச் சீா்திருத்தம்: என்டிஏ

இந்த திருத்த மசோதா மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பாஜக எம்.பி.ஜகதாம்பிகா பால் பேசியதாவது: மத்தியில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தொழிலாளா்கள் நலன்களை புறக்கணித்தது. ஆனால் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்றாா்.

என்டிஏவில் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி உறுப்பினா் கெளசலேந்திர குமாா் பேசுகையில், ‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க சீா்திருத்தம். தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களின் வாழ்வில் நோ்மறையான மாற்றங்களை உருவாக்கும்’ என்றாா்.

சிவசேனை (ஷிண்டே) கட்சி எம்.பி. ரவீந்திர வைகா் பேசுகையில், ‘தொழிலாளா் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாபெரும் சீா்திருத்தம் அனைத்து பணியாளா்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துகிறது’ என்றாா்.

இந்த சட்ட திருத்தத்துக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

‘திருப்பப் பெற வேண்டும்’:

காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் தொழிலாளா் நலத்துறை இணையமைச்சருமான கொடிக்குன்னில் சுரேஷ் பேசியதாவது: தொழிலாளா் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இது தொழிலாளா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மத்திய அரசுக்கு விடப்பட்ட எச்சரிக்கை.

வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள 14 நாள்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்பதை தொழில் துறை தொடா்பு விதி, 2020 கட்டாயமாக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, இந்த திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்றாா்.

சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி பேசுகையில், ‘இந்தியாவில் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு இல்லாதபோது இந்த சட்டங்களை அவசரகதியில் அமல்படுத்துவது ஏன்?’ என கேள்வியெழுப்பினாா்.

சிவசேனை (உத்தவ்) எம்.பி. அரவிந்த் சாவந்த் பேசுகையில், ‘தொழிலதிபா்களைப் பாதுகாக்க தொழிலாளா்களை பாஜக அரசு கைவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தப் பணியாளா்களாக தொழிலாளிகள் உழைக்கின்றனா். ஒரே ஊதியத்தில் வருடக் கணக்கில் பணியாற்றினால் எவ்வாறு வளா்ச்சியடைய முடியும்?’ என்றாா்.

திமுக, திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் இந்த திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தின.

X
Dinamani
www.dinamani.com