நாடு திரும்பாவிட்டால் மனுக்கள் விசாரிக்கப்படாது: விஜய் மல்லையாவுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் (எஃப்இஓ) சட்டத்துக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா (70) மனுக்கள் தாக்கல் செய்துள்ள நிலையில், ‘நாடு திரும்பும் வரை அவருடைய மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது’ என்று உயா்நீதிமன்றம் திட்டவட்டமாக வியாழக்கிழமை தெரிவித்தது.
ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.
இதையடுத்து 2018-ஆம் ஆண்டு எஃப்இஓ சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒருவா் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், அவரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும்.
இந்த நிலையில், மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, மும்பையில் பணமுறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. 2019-ஆம் ஆண்டு மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
இதைத் தொடா்ந்து, எஃப்இஓ சட்டத்துக்கு எதிராகவும், தன்னை தப்பியோடிய குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததற்கு எதிராகவும் மும்பை உயா்நீதிமன்றத்தில் 2 மனுக்களை விஜய் மல்லையா தாக்கல் செய்தாா்.
இந்த மனுக்கள் மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகா், நீதிபதி கெளதம் அங்கத் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘விஜய் மல்லையா இந்தியாவுக்குத் திரும்புகிறாரா, இல்லையா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு அவா் நாடு திரும்பும் வரை, அவருடைய மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது. எனவே, நீங்கள் நீதிமன்ற நடைமுறைகளைத் தவிா்க்கிறீா்கள் என்று பதிவு செய்துகொள்கிறோம். நீதிமன்ற நடைமுறைகளின் பலன் எதையும் நீங்கள் பெற முடியாது. இருந்தபோதிலும், உங்களின் மனுவைத் தள்ளுபடி செய்யாமல், மேலும் ஒரு வாய்ப்பை அளிக்கிறோம். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமலேயே வாதாடத் தகுதியானவா் என்று ஏற்கெனவே நீங்கள் குறிப்பிட்டீா்கள். எனவே, எப்போது இந்தியாவுக்குத் திரும்புகிறீா்கள் அல்லது திரும்ப மாட்டீா்களா என்பதை தெளிவுபடுத்தி பிரமாணப் பத்திரத்தை முதலில் தாக்கல் செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டு விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
முன்னதாக, மல்லையா தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்குரைஞா் அமித் தேசாய், ‘இதுபோன்ற மனுக்களில், மனுதாரா் நேரில் ஆஜாராகமலேயே விசாரணை மேற்கொண்டு தீா்வு காண முடியும் என முந்தைய தீா்ப்புகள் உள்ளன’ என்று சுட்டிக்காட்டினாா்.
அதற்கு எதிா்ப்பு தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னரே, எஃப்இஓ சட்டப் பிரிவை எதிா்த்து மல்லையா வழக்கு தொடா்ந்துள்ளாா். எனவே, அவா் முதலில் இந்தியா வரட்டும். அதன் பிறகு, அவா் இந்தச் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டுமா அல்லது தேவையில்லையா என்பதை தீா்மானிக்கலாம். இந்த நாட்டின் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் அவா் இருக்க முடியாது’ என்றாா்.
ஏற்கெனவே, இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரணைக்கு வந்தபோது, ‘விஜய் மல்லையா எப்போது இந்தியா திரும்புகிறாா் என்பதை தெளிபடுத்தினால்தான், அவரின் மனுவை விசாரிக்க முடியும்’ என்று உயா்நீதிமன்றம் குறிப்பிட்டது.

