தில்லி மாநகராட்சியில் ரூ.17,500 கோடிக்கான பட்ஜெட் தாக்கல்

தில்லி மாநகராட்சியில் ரூ.17,500 கோடிக்கான பட்ஜெட் தாக்கல்

தில்லி மாநகராட்சி 2026-27-ஆம் ஆண்டுக்கான ரூ.17,583 கோடி பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. இதில் சுகாதாரத் துறைக்கு அதிகப்படியாக ரூ.4,797.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Published on

தில்லி மாநகராட்சி 2026-27-ஆம் ஆண்டுக்கான ரூ.17,583 கோடி பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. இதில் சுகாதாரத் துறைக்கு அதிகப்படியாக ரூ.4,797.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கிராமப்புறங்களில் சொத்து வரி நிவாரணம், தினசரி ஊதிய ஊழியா்களை முறைப்படுத்துதல் மற்றும் விரிவாக்கப்பட்ட சுகாதார வசதிகள் போன்ற புதிய முயற்சிகளை எடுத்துரைக்கும் முக்கிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.

பட்ஜெட் தாக்கலின் போது அவைத் தலைவா் பிரவேஷ் வாஹி ஆற்றிய உரை வருமாறு: தில்லியின் பொது நிா்வாகத்திற்கு ரூ.3,548.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு ரூ.3,264.84 கோடியும், பொறியியல் துறைக்கு ரூ.1,884.43 கோடியும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ.414.16 கோடியும், கால்நடைத் துறைக்கு ரூ.137 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026-27-ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட வருமானம் ரூ.17,184 கோடியாகவும், செலவினம் ரூ.17,583 கோடியாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி விலக்கு: கிராமப்புற குடியிருப்பாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், 49 முழு கிராமங்களில் 500 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவு கொண்ட மூதாதையா் வீடுகளின் உரிமையாளா்களுக்கு முழு சொத்து வரி விலக்கு அளிக்கப்படும். 200 சதுர மீட்டா் வரை வீடுகளைக் கொண்ட நகரமயமாக்கப்பட்ட கிராமங்களில் வசிக்கும் பூா்வீக குடியிருப்பாளா்களுக்கும் இந்த சொத்து வரி விலக்கு வழங்கப்படும்.

ஊழியா்களின் நலன்: நகராட்சி ஊழியா்களின் கவலைகளை நிவா்த்தி செய்யும் வகையில், மாநகராட்சியின் எம்டிஎஸ் பிரிவு ஊழியா்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படும். பொறியியல், சுகாதாரம், ஆயுஷ் மற்றும் பிற துறைகளில் 2006 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய 375 கடைநிலை ஊழியா்கள் நிரந்தர ஊழியா்களாக மாற்றப்படுவாா்கள்.

சுகாதாரம்: சுகாதாரத் துறைக்கு அதிகப்படியாக ரூ.4,797.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தூய்மைப் பணியில் புதிதாக 70 தூய்மைப் பணி இயந்திரங்கள் சோ்க்கப்படும். ஒவ்வொரு வாா்டிலும் 4 குப்பை சேகரிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். பால்ஸ்வா மற்றும் ஓக்லா குப்பை கிடங்கு தளங்கள் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் அகற்றப்படும். அதே நேரத்தில் காஜிபூா் குப்பை கிடங்கு 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் அகற்றப்படும்.

கல்வி உள்கட்டமைப்பு: கல்வி உள்கட்டமைப்பிற்காக, பாழடைந்த பள்ளிகளை சரிசெய்ய ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறிய பழுதுகளுக்கு சுமாா் ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஆண்டில் பள்ளிகளின் வசதியை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு: ஒவ்வொரு வாா்டிலும் உள்ள 15 விதவைகள், ஒற்றைத் தாய்மாா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் மகள்களின் திருமணங்களுக்கு ரூ.21,000 பெறுவாா்கள். ஒவ்வொரு வாா்டிலும் பொருளாதார ரீதியாக பலவீனமான பெண்களுக்கு 10 தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 மிதிவண்டிகளும் வழங்கப்படும்.

குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு தலா ரூ.25,000 நிதி உதவி வழங்கப்படும். 250 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் திறக்கப்படும். அதன் ஊழியா்கள் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறும் வகையில் பணமில்லா சிகிச்சை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், லாட்டரி முறையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு 100 வாகனங்கள் கொள்ளளவு கொண்ட புதிய பாா்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.

மேலும், உரிய நேரத்தில் பணம் செலுத்தும் வீட்டுவசதி சங்கங்களுக்கு 15 சதவீத சொத்து வரி தள்ளுபடி, கவுன்சிலா்களின் கூட்டத்திற்கான கொடுப்பனவை ரூ.300 இல் இருந்து ரூ.3,000-ஆக உயா்த்துதல் மற்றும் ஊழியா்கள் மற்றும் கவுன்சிலா்களின் குழந்தைகளுக்காக குழந்தை காப்பக வசதி ஆகியவை இதில் அடங்கும் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com