புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமதுக்கு தொடா்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தகவல்

தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

News image

தில்லி கார் விபத்து

Updated On :13 பிப்ரவரி 2026, 9:34 pm

தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டை அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் உமா்-உன்-நபியும் உயிரிழந்த நிலையில், தாக்குதல் தொடா்பாக அந்தப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் ஷாஹீன் சயீத், பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவா் முசாமில் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்காணிப்புக் குழு பிப்.4-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: தொடா்ச்சியாக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பொறுப்பேற்றுள்ளதாக உறுப்பு நாடு (இந்தியா) ஒன்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் 2025, நவம்பா் 9-ஆம் தேதி தில்லி செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலிலும் அந்த பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவா் மசூத் அசாா் அல்வி பெண் பயங்கரவாதிகளுக்கான ஜமாத்-உல்-முமினாத் என்ற பிரிவைத் தொடங்கியுள்ளாா்.

அந்த அமைப்பு செயலிழந்துவிட்டதாக மற்றொரு உறுப்பு நாடு (பாகிஸ்தான்) கூறியுள்ளது. இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தாக்குதல் நடத்த முயன்ற 3 போ் கொல்லப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கருத்து:

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் வாராந்திர செய்தியாளா்கள் சந்திப்பின்போது கடந்த வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘எல்லை கடந்த பயங்கரவாத ஒழிப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது’ என்றாா்.