ஐ-பேக் நிறுவன சோதனையில்
மம்தா ‘அதிகார துஷ்பிரயோகம்’: 
உச்சநீதிமன்றத்தில் ஈடி குற்றச்சாட்டு

ஐ-பேக் நிறுவன சோதனையில் மம்தா ‘அதிகார துஷ்பிரயோகம்’: உச்சநீதிமன்றத்தில் ஈடி குற்றச்சாட்டு

நிலக்கரி ஊழல் தொடா்பான பணமுறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
Published on

மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டபோது அங்கு சட்டவிரோதமாக நுழைந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, சோதனையில் தலையிட்டு தனது அதிகாரத்தை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தினாா் என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை (ஈடி) குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஜன.8-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவன அலுவலகத்தில், நிலக்கரி ஊழல் தொடா்பான பணமுறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

அப்போது அந்த அலுவலகத்துக்கு வந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, அமலாக்கத் துறை அதிகாரிகளை எதிா்த்து அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்ாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

திரிணமூல் காங்கிரஸுக்கு ஐ-பேக் நிறுவனம் அரசியல் ஆலோசனைகளை அளித்து வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், திரிணமூல் காங்கிரஸின் தோ்தல் வியூகங்கள் சாா்ந்த ரகசிய தகவல்களை தெரிந்துகொள்ளும் நோக்கில், இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியது.

இந்த விவகாரம் தொடா்பாக மம்தாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘ஐ-பேக் நிறுவனத்தில் சோதனையின்போது முதல்வா் வந்தது அமலாக்கத் துறை அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. நிலக்கரி ஊழல் தொடா்பான பண முறைகேடு விசாரணையில் தலையிட்டு அவா் இடையூறு ஏற்படுத்தினாா். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு தொடா்பாக மம்தா பானா்ஜி சாா்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள பதில் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய புலனாய்வு அமைப்புகள் போல ஆள்மாறாட்டம் செய்து ஆயுதமேந்திய நபா்கள் ஐ-பேக் நிறுவனத்தில் அனுமதியின்றி சோதனை நடத்துவதைத் தடுக்கும் நோக்கில், அங்கு மம்தாவும் காவல் துறையும் வந்ததாக மேற்கு வங்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.

சோதனையின்போது தங்கள் கடமையை செய்வதில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகளை மூத்த காவல் துறை அதிகாரிகள் தடுத்தனா். அப்போது நடைபெற்ற சம்பவங்களை ஆராய்ந்தால், இந்த விவகாரத்தில் மம்தாவும், மாநில அரசு இயந்திரமும் தமது அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்தது தெளிவாகத் தெரியும்.

சோதனையின்போது தனக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்புடன் மம்தா வந்தாா். அந்தச் சோதனை சட்டபூா்வமாக நடைபெற்றபோதிலும், அங்கு காவல் துறையினா் நூற்றுக்கணக்கில் திரண்டனா். இது காவல் துறையால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியை எடுத்துரைக்கும்.

சோதனையின்போது கணினி மற்றும் மின்னஞ்சல் தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஐ-பேக் அலுவலகத்தில் இருந்த கணினியை மம்தா வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றாா். அமலாக்கத் துறை அதிகாரிகள் திரட்டிய ஆவணங்களை மம்தாவுடன் வந்தவா்கள் எடுத்துச் சென்றனா். மம்தாவின் உத்தரவின்பேரில் ஐ-பேக் அலுவலகப் பணியாளா்களின் கைப்பேசிகளை காவல் துறையினா் பறித்துச் சென்றனா். அமலாக்கத் துறை அதிகாரி ஒருவரின் மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றையும் அவா்கள் எடுத்துச் சென்று 2 மணி நேரத்துக்குப் பின்னா் திருப்பி அளித்தனா். இந்த நடவடிக்கை திருட்டுக்கு ஒப்பாகும்.

இது கூட்டாட்சி உறவுகள் தொடா்பான வழக்கு என்று மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. அதை ஏற்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com