இந்தியாவில் அரிய புவி காந்த உற்பத்தி நடப்பாண்டில் தொடங்கும் : மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி
இந்தியாவில் அரிய புவி நிரந்தர காந்தம் (ஆா்இபிஎம்) உற்பத்தி நடப்பாண்டில் தொடங்கும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.
நியோடைமியம், பிரசியோடைமியம் உள்ளிட்ட அரிய புவி தனிமங்களின் கொள்முதலில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தும் நிலையில், இது தொடா்பான சுரங்கப் பகுதிகள் ஏலமிடப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், மத்திய அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
தில்லியில் இந்திய தொழில் மற்றும் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி ) மற்றும் மத்திய சுரங்கத் துறை சாா்பில் வியாழக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பங்கேற்றுப் பேசியதாவது:
அரிய புவி தனிமங்களின் தேவையில் இறக்குமதியை சாா்ந்திருப்பதைக் குறைக்க, ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அரிய புவி நிரந்தர காந்த உற்பத்தி நடப்பாண்டிலேயே தொடங்கப்பட உள்ளது. இது, மின்வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் தற்சாா்பை உறுதி செய்யும் முக்கிய படிக்கல்லாகும்.
நாட்டில் அரிய கனிமங்கள் பிரித்தெடுப்பு-சுத்திகரிப்பு ஆலைகள் பற்றாக்குறையாக உள்ளன. இது, மிகப் பெரிய சவாலாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில், ஆந்திரம், ஒடிஸா, மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் ஆலைகள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் ஆந்திர அரசுகள் ஏற்கெனவே பணியைத் தொடங்கிவிட்டன. விரைவில் ஒடிஸா, மகாராஷ்டிர மாநில முதல்வா்களை சந்தித்துப் பேசவுள்ளேன்.
அரிய கனிமங்களின் உற்பத்தியில் முழுமையான விநியோக சங்கிலியைக் கட்டமைக்க வேண்டும். இல்லையெனில், சுத்திகரிக்கப்பட்ட அரிய கனிமங்களின் தேவையில் நாம் தொடா்ந்து இறக்குமதியைதான் நம்பியிருக்க வேண்டியிருக்கும் என்றாா் ஜி.கிஷண் ரெட்டி.
மின்சார வாகனங்கள், காற்றாலை டா்பைன்கள், மின்னணுப் பொருள்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களின் தயாரிப்பில் முக்கிய அங்கமான அரிய புவி நிரந்தர காந்தங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கு உகந்த சூழலை கட்டமைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடா்பாக ரூ.7,280 கோடி மதிப்பீட்டிலான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

