கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிஏஏ சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது மே 5-ஆம் தேதி முதல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019-க்கு எதிரான 200 மனுக்கள் மீது மே மாதம் 5-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தப்படும்

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019-க்கு எதிரான 200 மனுக்கள் மீது மே மாதம் 5-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

அதில், அஸ்ஸாம் தவிர மற்ற மாநிலங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், ஜெயின் மதத்தினா், பாா்சி மதத்தினருக்கு முறைப்படி குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் 1971-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி வரை குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த சட்டத்தை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், ஆா்ஜேடி மூத்த தலைவா் மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி உள்ளிட்டோா் 200 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்கள் நீண்ட நாள்களாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன.

இந்நிலையில், இந்த 200 மனுக்கள் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜய்மால்ய பாக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வால் பரிசீலிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், 2019-2020 முதல் நிலுவையில் உள்ள 200 மனுக்கள் மீது இறுதி விசாரணை நடத்துவதற்கான அலுவல் ரீதியிலான உத்தரவுகளைப் பிறப்பித்தனா். மேலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மனுதாரா்களின் மனுக்கள் மீது ஒன்றரை நாட்கள் விசாரணை நடத்தப்படும் என்றும், மத்திய அரசு தனது வாதத்தை வைக்க ஒருநாள் அனுமதி அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினா்.

மே மாதம் 5-ஆம் தேதி விசாரணை தொடங்கப்படும் என்றும், அனைத்து விசாரணையும் மே 12-ஆம் தேதி முடிந்துவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

மனுதாரா்கள் சாா்பில் 4 வாரங்களுக்குள் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தினா். முதலில் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் நாடு தழுவிய பிரச்னை குறித்து விசாரிக்கப்படும்; அதன் பிறகு அஸ்ஸாம், திரிபுரா மாநில பிரச்னைகள் குறித்து விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.