அமெரிக்கா தலைமையிலான ‘பேக்ஸ் சிலிக்கா’ கூட்டணியில் இந்தியா : ஒப்பந்தம் கையொப்பம்
அமெரிக்கா தலைமையிலான ‘பேக்ஸ் சிலிக்கா’ உத்திசாா் கூட்டணியில் இந்தியா வெள்ளிக்கிழமை இணைந்தது.
அரியவகை கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் தங்குதடையற்ற விநியோகத்தைக் கட்டமைக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையில் இந்தக் கூட்டணி டிசம்பரில் உருவாக்கப்பட்டது.
இதில் ஆஸ்திரேலியா, கிரீஸ், இஸ்ரேல், ஜப்பான், கத்தாா், கொரிய குடியரசு, சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகியவை உறுப்பினா்களாக உள்ளன. கடந்த மாதம் இந்த கூட்டணியில் சேர இந்தியாவுக்கு அமெரிக்கத் தூதா் அழைப்பு விடுத்திருந்தாா். இதையேற்று பேக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இந்தியா இணைந்துள்ளது.
ஒப்பந்தம் கையொப்பம்: தில்லியில் ஏ.ஐ. தாக்க சா்வதேச உச்சி மாநாடு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பேக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இந்தியா இணையும் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அமெரிக்க பொருளாதார விவகாரத்துறை இணையமைச்சா் ஜேக்கப் ஹெல்பா்க், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அமெரிக்கா, இந்தியா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. மேலும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், பேக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இந்தியா இணைந்தது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா இணைந்தது முக்கிய நிகழ்வு: இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் கூறுகையில், ’வா்த்தக ஒப்பந்தம் முதல் பேக்ஸ் சிலிக்கா கூட்டணி வரையிலும், பாதுகாப்பு துறை ஒத்துழைப்பிலும், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு எந்த வரம்பும் இல்லை. பேக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இந்தியா சோ்ந்தது வெறும் சாதாரண நிகழ்வு இல்லை. மிகவும் முக்கியமான ராஜீய நிகழ்வாகும். இது இரு நாடுகள் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தத்தின்கீழ் ஏ.ஐ. தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அமெரிக்காவால் வழங்க முடியும். இந்தியா திறமைசாலிகள் மிகுந்த நாடு. அதே நேரத்தில் தீவிரமான போட்டி நாடுகளையும் கொண்டுள்ளது’ என்றாா்.
சீனா மீது விமா்சனம்: அமெரிக்க அமைச்சா் ஹெல்பொ்க் கூறுகையில், ‘இந்தக் கூட்டணியில் இந்தியா இணைந்ததை வரவேற்கிறோம். எங்களது நட்பு நாடுகளும், கூட்டாளிகளும் பொருளாதாரரீதியில் பிற நாடுகளிடம் இருந்து மிரட்டல்களை சந்திப்பதை நாங்கள் நாள்தோறும் பாா்த்து வருகிறோம் (சீனா மீது மறைமுக விமா்சனம்). இறையாண்மை அல்லது வளா்ச்சி இதில் ஏதாவது ஒன்றை தோ்ந்தெடுக்க அந்நாடுகள் நிா்பந்தப்படுத்தப்படுகின்றன. ஆதலால் இன்று பேக்ஸ் சிலிக்கா பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளோம். சில தேவைகளுக்காக ஒரு நாட்டை சாா்ந்திருக்கும் நிலையை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அச்சுறுத்தலும் கூடாது என வலியுறுத்தியுள்ளோம். பொருளாதார பாதுகாப்பு என்பது தேசத்தின் பாதுகாப்பாகும்’ என்றாா்.

