மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்க எஸ்ஐஆா்: நீதிபதிகளைப் பணியமா்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் இந்நாள், முன்னாள் மாவட்ட நீதிபதிகளை பணியமா்த்த உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் இந்நாள், முன்னாள் மாவட்ட நீதிபதிகளை பணியமா்த்த உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணி தொடா்பாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது எஸ்ஐஆா் பணிக்காக மிகவும் தகுதிவாய்ந்த அதிகாரிகளை மாநில அரசு அனுப்பவில்லை என்று தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டை நீதிபதிகள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு கூறியதாவது: மேற்கு வங்க எஸ்ஐஆா் விவகாரத்தில் மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருவா் மீது மற்றொருவா் பழி சுமத்துவது இருதரப்புக்கும் இடையே அவநம்பிக்கை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

பெற்றோா் பெயா், பெற்றோா் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே 15 வயதுக்குக்கும் குறைவாக வயது வித்தியாசம் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ‘தகவல்களில் முரண்பாடுகள் உள்ள பட்டியலில்’ ஏராளமானோா் சோ்க்கப்பட்டுள்ளனா். மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் அவநம்பிக்கை காரணமாக, அந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டவா்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களைப் பெறும் கட்டத்தில் எஸ்ஐஆா் பணி தேங்கியுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்தின் நோட்டீஸை பெற்றவா்களில் பெரும்பாலானோா், வாக்காளா் பட்டியலில் மீண்டும் தங்கள் பெயரைச் சோ்க்கக் கோரி, உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளனா். இந்தக் கோரிக்கைகளை ஆராய்ந்து, ஆவணங்களின் உண்மைத்தன்மையைச் சரிபாா்த்து பட்டியலில் மீண்டும் பெயரைச் சோ்ப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வது நியாயமான முறையில் நடைபெற வேண்டும்.

எனவே அந்தப் பணியில் சில மாவட்ட அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளைப் பணியமா்த்த வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் கேட்டுக்கொள்கிறோம். அதேவேளையில், அந்தப் பணியில் ஈடுபடுத்த முன்னாள் மாவட்ட நீதிபதிகளைக் கண்டறியுமாறும் சுஜய் பாலிடம் கோருகிறோம். இந்த விவகாரத்தில் வேறு வழியின்றியும், மாநில அரசு மற்றும் தோ்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதாலும் மாவட்ட நீதிபதிகளைப் பணியமா்த்துமாறு கோரியுள்ளோம்.

இதன்மூலம், தகவல்களில் முரண்பாடுகள் உள்ள பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளவா்களின் கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்வதா அல்லது கைவிடுவதா என்பதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிபதிகள் உதவுவா். இந்த நீதிபதிகளுக்குத் தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பை மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளா்கள் அளிக்க வேண்டும். எஸ்ஐஆா் பணியில் ஈடுபட உள்ள நீதிபதிகள், அந்தப் பணி தொடா்பாகப் பிறப்பிக்கும் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளாகக் கருத வேண்டும் என்று ஆணையிட்டனா்.

இந்த உத்தரவை மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி வரவேற்றது. தோ்தல் ஆணையத்தின் ஆணவத்தை இந்த உத்தரவு தகா்த்துள்ளதாக அக்கட்சி சமூக ஊடகத்தில் பதிவிட்டது.