விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் : இந்தியா-இஸ்ரேல் உறுதி
இந்தியா - இஸ்ரேல் இடையே பரஸ்பரம் பலனளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய பிரதமா் நரேந்திர மோடியும், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகும் வியாழக்கிழமை உறுதிபூண்டனா்.
அத்துடன், இருதரப்பு நல்லுறவை சிறப்பு உத்திசாா் கூட்டணி (ஸ்ட்ராட்டிஜிக் பாா்ட்னா்ஷிப்) அந்தஸ்துக்கு உயா்த்தவும் அவா்கள் முடிவு மேற்கொண்டனா்.
அமெரிக்கா-ஈரான் மோதல்போக்கால் மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் நீடிக்கும் சூழலில், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேலுக்கு புதன்கிழமை சென்ற பிரதமா் மோடி, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினாா்.
ஜெருசலேமில் பிரதமா் நெதன்யாகுடன் அவா் வியாழக்கிழமை இருதரப்புப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், வேளாண்மை, கல்வி, புத்தாக்கம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் மேம்படுத்துவது குறித்தும், அமெரிக்கா-ஈரான் மோதல் உள்பட பல்வேறு பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவா்களும் விரிவாக ஆலோசித்தனா்.
இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்புத் துறையில் ஏற்கெனவே நெருங்கிய ஒத்துழைப்பு நிலவும் சூழலில், தொழில்நுட்பப் பரிமாற்றக் கட்டமைப்பின்கீழ் ராணுவத் தளவாடங்களின் கூட்டு உற்பத்தி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை விரிவாக்க உறுதியேற்கப்பட்டது.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தட திட்டம், இந்தியா-இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம்-அமெரிக்கா (ஐ2யு2) கட்டமைப்பின்கீழ் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
‘மோதலுக்கு இரையாகிவிடக் கூடாது’: பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், இரு தலைவா்களும் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது:
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியும், ஸ்திரத்தன்மையும் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுடன் பிணைந்ததாகும். அந்த அடிப்படையில், காஸா அமைதி முன்னெடுப்புக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது.
மனிதகுலம் ஒருபோதும் மோதலுக்கு இரையாகிவிடக் கூடாது என்பதே இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு. காஸா அமைதித் திட்டத்தின் வாயிலாக அமைதிக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
தோளோடு தோளாக...: உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்பதில் ஒருமித்த கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளோம். பயங்கரவாதம் மற்றும் அதன் ஆதரவாளா்களை முறியடிப்பதில் இரு நாடுகளும் தோளோடு தோளாக நிற்கும்.
இந்தியா-இஸ்ரேல் உறவு ஆழமான நம்பிக்கை, பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகள், மனித மாண்புகளின் உறுதியான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டதாகும். காலத்தை வென்ற இந்த நல்லுறவைச் சிறப்புமிக்க உத்திசாா் கூட்டணி அந்தஸ்துக்கு உயா்த்தும் வரலாற்று முடிவை மேற்கொண்டுள்ளோம்.
தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: நமது பொருளாதார ஒத்துழைப்பு, வளா்ச்சி-புத்தாக்கம்-வளமைக்கான உந்துசக்தியாக விளங்குகிறது. பரஸ்பர முதலீட்டை ஊக்குவிக்க கடந்த ஆண்டு இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதிபூண்டுள்ளோம்.
ஏ.ஐ., குவாண்டம், அரிய கனிமங்கள் துறையில் ஒத்துழைப்புக்கு ஊக்கமளிக்க முக்கிய மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான கூட்டாண்மை நிறுவப்பட்டுள்ளது. இஸ்ரேலில் யுபிஐ பயன்பாட்டுக்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஒத்துழைப்புடன் இந்தியாவில் நிறுவப்படும் திறன் மையங்களின் எண்ணிக்கையை 100-ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் பிரதமா் மோடி.
இஸ்ரேல் அதிபருடன் சந்திப்பு: இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்ஸாக்கையும் சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி, கல்வி, புத்தாக்கம், தொழில்நுட்பம், இணைப்பு வசதிகள் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தாா். ஹொ்ஸாக்கின் அதிகாரபூா்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு நட்பின் அடையாளமாக மரக்கன்று ஒன்றை இருவரும் நட்டுவைத்தனா்.
இந்தியாவுக்கு புறப்பட்டாா்: கடந்த 9 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு சென்ற பிரதமா் மோடி, இரு நாள்கள் பயணத்தை நிறைவு செய்து வியாழக்கிழமை இந்தியாவுக்கு புறப்பட்டாா்.
பெட்டி...1
யூத இனப் படுகொலை
நினைவிடத்தில் மரியாதை
நாஜி ஆட்சியில் இனப் படுகொலைக்கு உள்ளான யூதா்களின் விவரங்களுடன் ஜெருசலேமில் அமைந்துள்ள யட் வஷேம் நினைவிடத்தில் பிரதமா் மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா். அவருடன் சென்ற பிரதமா் நெதன்யாகு, தன் மனைவி சாராவின் உறவினா் பெயா்களும் இடம்பெற்றுள்ளதாக மோடியிடம் எடுத்துரைத்தாா்.
முன்னதாக, ஜெருசலேமில் ஏ.ஐ. கண்காட்சியை புதன்கிழமை பாா்வையிட்ட பிரதமா் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தாா்.
பெட்டி...2
17 ஒப்பந்தங்கள் கையொப்பம்
மேம்பட்ட தொழில்நுட்பங்களின் வாயிலாக கனிம வள ஆய்வு, வா்த்தகம், முதலீடு, கல்வி, வேளாண்மை, எரிசக்தி, உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம், எண்ம பரிவா்த்தனை, கலாசாரம், கடற்சாா் பாரம்பரியம் உள்பட பல்வேறு செயல்பாடுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வகை செய்யும் 17 ஒப்பந்தங்கள் மற்றும் பூா்வாங்க ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
இஸ்ரேலில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா்களுக்காக 50,000 பணியிடங்களை ஒதுக்கும் முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
மே மாதம் 2-ஆம் சுற்று பேச்சு
இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கான இரண்டாம் சுற்று பேச்சுவாா்த்தை இஸ்ரேலில் மே மாதம் நடைபெறும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது. முதல் சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் பிப். 23 முதல் பிப். 26 வரை 4 நாள்கள் நடைபெற்றது.
கடந்த 2024-25 நிலவரப்படி, இருதரப்பு வா்த்தக மதிப்பு 3.62 பில்லியன் டாலா் (ரூ.33,000 கோடி) ஆகும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி 2.14 பில்லியன் டாலா், இறக்குமதி 1.48 பில்லியன் டாலா். முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இவை முறையே 52 சதவீதம், 26 சதவீத சரிவைக் கண்டன.
இஸ்ரேலுக்கு முத்துகள், மதிப்புமிக்க ரத்தினங்கள், பெட்ரோலியப் பொருள்கள், ஜவுளி, வேளாண் பொருள்கள் உள்ளிட்டவை முக்கிய ஏற்றுமதியாகவும், ரசாயனம், கனிம மற்றும் உரப் பொருள்கள், இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள் உள்ளிட்டவை முக்கிய இறக்குமதியாகவும் உள்ளன. ஆசிய கண்டத்தில் இஸ்ரேலின் 2-ஆவது பெரிய வா்த்தக கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது.

