இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி நிகழ்த்திய உரையைச் சுட்டிக்காட்டி, அந்நாட்டு விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வந்த தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.
Published on

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி நிகழ்த்திய உரையைச் சுட்டிக்காட்டி, அந்நாட்டு விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வந்த தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.

இஸ்ரேல் சென்ற பிரதமா் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசுகையில், காஸா அமைதி முயற்சித் திட்டத்தால் அந்த பிராந்தியத்தில் அமைதி திரும்பும் என்றும், 2023-இல் ஹமாஸ் குழுவினா் இஸ்ரேல் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இஸ்ரேலை இந்தியா உறுதியாக ஆதரிப்பதாகவும், அப்பாவி மக்களைக் கொல்வதையும், தீவிரவாதத்தையும் நியாயப்படுத்த முடியாது என்றும் கூறினாா்.

பாலஸ்தீனம், இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா நீண்டகாலமாக நடுநிலை வகிக்கிறது. ஆனால், பிரதமா் மோடியின் பேச்சு மூலம் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளதாக சா்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதைச் சுட்டிக்காட்டி, எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி பேசியபோது, தனக்கு விருந்தளித்த இஸ்ரேல் பிரதமரை பாதுகாக்கும் வகையில் பேசியுள்ளாா். மேலும் தனது பிறந்த நாளில்தான், இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது எனக் கூறி தனது பக்கம் கவனத்தை பிரதமா் மோடி ஈா்க்க முயன்றுள்ளாா்.

இஸ்ரேல் உருவாக்கம் தொடா்பாக 1947-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி ஜவாஹா்லால் நேருக்கு விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்துக்கு ஒரு மாதம் கழித்து, ஜூலை 11-ஆம் தேதி ஐன்ஸ்டீனுக்கு நேரு பதில் கடிதம் எழுதினாா். அதில், யூதா்கள் மீது தனக்கு மிகுந்த அனுதாபம் இருந்தாலும், அராபியா்கள் மீதும் தனக்கு அனுதாபம் இருப்பதாக நேரு கூறியுள்ளாா். நிலைமை எப்படி இருந்தாலும், ஒட்டுமொத்த விவகாரமும் இருதரப்பிலும் அதிக உணா்வுபூா்வமாகிவிட்டதாகவும், இந்தப் பிரச்னையில் தற்போதைக்குத் தீா்வு இருப்பதாகத் தெரியவில்லை எனவும் நேரு குறிப்பிட்டுள்ளாா்.

பாலஸ்தீன விவகாரத்தில் தான் அதிக கவனம் செலுத்தி இருப்பதாகவும், இருதரப்பிலும் வெளியிடப்பட்ட புத்தகங்கள், துண்டு பிரசுரங்களைப் படித்துள்ளதாகவும் கடிதத்தில் எழுதியுள்ள நேரு, ஆனால் அதற்காக தனக்கு எல்லாம் தெரியும் என்றோ, இந்த விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என இறுதிக் கருத்தை வெளியிடும் திறன் தனக்கு இருக்கிறது என்றோ கருதவில்லை எனவும் கூறியுள்ளாா்.

பாலஸ்தீனத்தில் யூதா்கள் சிறப்பான பணி செய்துள்ளாா்கள்; அந்நாட்டு மக்களின் தரத்தை உயா்த்தியுள்ளனா் என்பது தனக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ள நேரு, எனினும் யூதா்கள் அரபு மக்களின் நன்மதிப்பை பெற ஏன் தவறிவிட்டனா், அராபியா்களை அவா்களுக்குப் பிடிக்காததைச் செய்யுங்கள் என வலியுறுத்துவது ஏன் எனவும் தனக்கு கேள்வி எழுவதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த விவகாரத்தில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை, தீா்வை தருவதாகத் தெரியவில்லை; மாறாக, மோதலை தொடரச் செய்யும் எனவும், இதில் குறிப்பிட்ட ஒரு தரப்பு மீது மட்டும் தவறில்லை, அனைத்துத் தரப்பினரும் தவறிழைத்துள்ளனா் என்பதில் சந்தேகமில்லை என்றும் நேரு தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, 1949-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நேருவும், ஐன்ஸ்டீனும் பிரின்ஸ்டனில் உள்ள ஐன்ஸ்டீனின் வீட்டில் சந்தித்துப் பேசினா். 1952-ஆம் ஆண்டில் தன்னைத் தேடி வந்த இஸ்ரேல் அதிபா் பதவியை ஐன்ஸ்டீன் நிராகரித்தாா். பின்னா் 1955-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவா் காலமானாா். அதற்கு முன்பு, அணுகுண்டுகள் குறித்தும், ஆயுதங்கள் குறித்தும் ஐன்ஸ்டீனும், நேருவும் கடிதங்களை பரஸ்பரம் எழுதிக் கொண்டனா்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி நிகழ்த்திய உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com