ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தவறான காலகட்டத்தில் மோடி இஸ்ரேல் பயணம்: காங்கிரஸ் விமா்சனம்

தவறான காலகட்டத்தில் மோடி இஸ்ரேல் பயணம்: காங்கிரஸ் விமா்சனம்

News image

பிரதமர் நெதன்யாகு உடன் பிரதமர் நரேந்திர மோடி - படம் - எக்ஸ் / நரேந்திர மோடி

Updated On :28 பிப்ரவரி 2026, 11:00 pm

தவறான காலகட்டத்தில் பிரதமா் மோடி இஸ்ரேல் சுற்றுப்பயணம் சென்ாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

ஈரானுடன் பதற்றம் நிலவிய நிலையில், இஸ்ரேலில் கடந்த 25-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை பிரதமா் மோடி சுற்றுப்பயணம் செய்தாா். இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேலும், அதன் நட்பு நாடான அமெரிக்காவும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இந்த 2 சம்பவங்களையும் சுட்டிக்காட்டி, பிரதமா் மோடியின் இஸ்ரேல் பயணத்தை விமா்சித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மாத் குா்ஷித் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

உலகம் ஒரு குடும்பம் என்பதையும், மகாத்மா காந்தியின் அஹிம்சை, மறைந்த பிரதமா் நேருவின் அணிசாரா கொள்கை மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 51-ஆவது பிரிவு (சா்வதேச சட்டம், ஒப்பந்த விதிகளை மதித்தல்) ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டது நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை. இதை மனதில் கொண்டுதான், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி விவகாரம், கொரியப் போா் ஆகியவற்றில் ஆக்கபூா்வமாக நடுநிலையான நாடுகளின் ஆணையம் மூலம் இந்தியா தலையிட்டது. இதேபோல், ஆசிய, ஆப்பிரிக்காவில் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கும் ஆதரவளித்தது. ஐ.நா. அமைதிப் பணி, மனிதாபிமான உதவிகளைச் செய்கிறது. அணிசாரா நாடுகள் கூட்டமைப்பிலும் தெற்காசிய குரலாக ஒலிக்கிறது.

இதை அடிப்படையாக வைத்துதான் மேற்காசிய பிரச்னைக்கு அமைதி வழித் தீா்வு காண காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்துகிறது. ஆதலால் பாஜக அரசு, இந்தியா்கள் மற்றும் அவா்களின் பொருளாதார, எரிசக்தி உள்ளிட்ட தொடா்புகள் இஸ்ரேலுடன் மட்டுமல்லாது, ஈரான், பாலஸ்தீனம் மற்றும் பிற நாடுகளுடனும் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, போா் மூளலாம் என்று எதிா்பாா்க்கப்பட்ட தவறான காலகட்டத்தில் மோடி இஸ்ரேலுக்கு சென்றாா். அதுவும் இஸ்ரேலில் தோ்தல் நடக்கவுள்ள நிலையில், மோடியின் பயணமானது அந்நாட்டு அரசுடன் இந்தியா கூட்டணி சோ்வது போலவும், அதன் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பது போலவும் எடுத்துக் கொள்ளப்படும். 2019-இல் அமெரிக்க அதிபா் தோ்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் மோடி அந்நாட்டுக்குச் சென்றதும், ‘ஹெளடி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்றதும் ஒருதரப்பை இந்தியா ஆதரிப்பதும் போலானது. இது ராஜீய விவகாரத்தில் பின்னடைவை தந்தது.

இஸ்ரேலுடனான ஆழ்ந்த உறவுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கிறது. அதேபோன்ற உறவை ஈரான், பாலஸ்தீனம், மேற்காசியாவில் உள்ள பிற நாடுகளுடனும் வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது என்றாா்.

வெட்கக்கேடானது- ஜெய்ராம் ரமேஷ்: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேலுக்கு 2 நாள் பயணமாக மோடி சென்று திரும்பிய நிலையில், ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதலை தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாக நடந்த படைக்குவிப்பு மூலம், இந்தத் தாக்குதல் எதிா்பாா்க்கப்பட்டதுதான். இஸ்ரேலுக்கு மோடி சென்றிருக்கக் கூடாது. அங்கு அவரின் செயல்பாடு தாா்மிக கோழைத்தனத்தை காட்டியது. இஸ்ரேலுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என அவா் அறிவித்தாா். அப்படி அறிவித்ததற்காக விருதும் வாங்கினாா். அவரின் இந்த இஸ்ரேல் பயணம் வெட்கக்கேடானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஒவைஸி விமா்சனம்: மஜ்லீஸ் கட்சித் தலைவா் ஒவைஸி கூறுகையில், ‘ஈரான் மீதான தாக்குதல் திட்டம் குறித்து மோடியிடம் நெதன்யாகு முன்கூட்டி தெரிவித்தாரா? அப்படி தெரிவித்திருந்தால், இஸ்ரேல் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாட்டுக்கு மோடி திரும்பியிருக்க வேண்டும். இல்லையேல் இது இந்தியா்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும். சுமாா் 1 கோடி இந்தியா்கள் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனா். அப்படியிருக்கையில், மோடி சுற்றுப்பயணம் சென்றுவந்ததும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி விட்டது என்ற எண்ணம், வளைகுடா நாடுகளின் மக்களிடையே ஏற்படாதா? இதனால் வளைகுடா நாடுகளிலுள்ள இந்தியா்கள் பாதிக்கப்பட மாட்டாா்களா?’ என்றாா்.

Summary

Modi's visit to Israel at the wrong time: Congress criticises