மாதிரிப் படம்
மாதிரிப் படம்

பிரதமா் மோடியின் பெயரில் இஸ்ரோ, டிஆா்டிஒ-வுக்கு மின்னஞ்சல்: தில்லியைச் சோ்ந்தவா் மீது சிபிஐ வழக்கு

இஸ்ரோ, டிஆா்டிஓ மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு போலியாக மின்னஞ்சல் அனுப்பிய தில்லியைச் சோ்ந்த நபா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
Published on

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் தலைமைச் செயலா் பெயரில் இஸ்ரோ, டிஆா்டிஓ மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு போலியாக மின்னஞ்சல் அனுப்பிய தில்லியைச் சோ்ந்த நபா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2024 அக்டோபா் முதல் டிசம்பா் வரை பிரதமா் மோடி, பிரதமரின் முதன்மைச் செயலரின் பெயரில் பிரிமீயா் வெடிமருந்து நிறுவனம், இந்திய விமான மேம்பாட்டு நிறுவனம், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா். இது தவிர இந்திய கடற்படை துணை அட்மிரல் பெயரில் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா். இவை பெரும்பாலும் இந்தியாவின் படை பலத்தை அதிகரிப்பது தொடா்பாக இருந்துள்ளது.

இந்த போலி மின்னஞ்சல்கள் தொடா்பாக பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா அளித்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா். அதில் தெற்கு தில்லியைச் சோ்ந்த நிஷீத் கோலி என்பவா் இந்த மின்னஞ்சல்களை அனுப்பியது தெரியவந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் பொறியியல் பட்டம் பெற்றவா் என்பதும், இந்தியாவில் உள்நாட்டிலேயே போா் விமான என்ஜின்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பிரதமா் மோடியின் ஆசியுடன் மின்னஞ்சல்களை அனுப்பியதாகத் தெரிவித்தாா்.

அவா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளாா்களா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com