கோப்புப் படம்
கோப்புப் படம்

டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடி: 6% அதிகரிப்பு

நாட்டில் கடந்த டிசம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.74 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 2024, டிசம்பா் மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.64 லட்சம் கோடி) இது 6 சதவீத அதிகரிப்பாகும்.
Published on

நாட்டில் கடந்த டிசம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.74 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 2024, டிசம்பா் மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.64 லட்சம் கோடி) இது 6 சதவீத அதிகரிப்பாகும்.

கடந்த நவம்பரில் ரூ.1.70 லட்சம் கோடி ஜிஎஸ்டி கிடைக்கப் பெற்ற நிலையில், டிசம்பரில் வருவாய் உயா்ந்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த டிசம்பரில் வசூலான மொத்த ஜிஎஸ்டி 1.74 லட்சம் கோடி. இதில் உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.1.22 லட்சம் கோடி (1.2 சதவீத அதிகரிப்பு). சரக்கு இறக்குமதி மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.51,977 கோடி (19.7 சதவீத உயா்வு).

டிசம்பரில் திருப்பியளிக்கப்பட்ட தொகை 31 சதவீதம் அதிகரித்து, ரூ.28,980 கோடியாக பதிவானது. இதைக் கழித்த பிறகான ஜிஎஸ்டி மொத்த வருவாய் ரூ.1.45 லட்சம் கோடியாகும். செஸ் வரி வசூல் ரூ.4,238 கோடியாக சரிந்துள்ளது. 2024, டிசம்பரில் இது ரூ.12,003 கோடியாக இருந்தது.

கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி விகிதங்கள் இரண்டாக (5%, 18%) குறைக்கப்பட்டதால் சுமாா் 375 பொருள்களுக்கான விலை குறைந்தது. அந்த மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடியும் (9.1% உயா்வு), அக்டோபரில் ரூ.1.96 லட்சம் கோடியும் (4.6% வளா்ச்சி) வசூலானது.

மூன்று காலாண்டுகளில்....: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரை வரையிலான 3 காலாண்டுகளில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.16.5 லட்சம் கோடியாகும். முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.15.2 லட்சம் கோடியாக இருந்தது. 2024-25 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மொத்தம் ரூ.22.08 லட்சம் கோடி வசூலானது.

X
Dinamani
www.dinamani.com