

மத்தியப் பிரதேசத்தின் நர்மதா நதிக்கரை அருகே 200 கிளிகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரை அருகே கடந்த நான்கு நாள்களில், இறந்த நிலையில் பல கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. உடற்கூராய்வு அறிக்கையில், கிளிகள் இறப்புக்கு பறவைக் காய்ச்சல் காரணம் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதனால் மக்கள் மத்தியில் எழுந்த பீதி தணிந்தது.
சில கிளிகள் உயிருடன் மீட்கப்பட்டாலும், உணவில் இருந்த விஷத்தன்மை மிகக் கடுமையாக இருந்ததால் அவை சிறிது நேரத்திலேயே இறந்ததாக மாவட்ட வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி டோனி சர்மா தெரிவித்தார். கிளிகளின் உட்புற மாதிரிகள் மேலும் பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்வடக்ட் பாலம் அருகே பறவைகளுக்கு உணவளிப்பதை வனத்துறை அதிகாரிகள் தடை செய்துள்ளதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர். கால்நடை மருத்துவர் சுரேஷ் பாகேல், உயிரிழந்த பறவைகளின் வயிற்றில் அரிசி மற்றும் சிறிய கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக, தவறான உணவளிப்பே இந்த இறப்பிற்கு காரணமாகத் தெரிகிறது என்றும், பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில் உணவு உண்ணுதல் மற்றும் நர்மதா நதிநீரின் பாதிப்பு ஆகியவையும் முக்கிய காரணிகளாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.