

வயநாடு நிலச்சரிவு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களில் 300 பேருக்கு முதல்கட்டமாக அடுத்த மாதம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக சூரிய மின்சக்தி அமைப்பும், குடிநீர் சேமிப்புத் தொட்டியும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடந்த 2024 ஜூலை 30-ஆம் தேதி பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், ஏராளமான வீடுகள் புதைந்து 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த பேரிடரில் பாதிக்கபட்டவர்களுக்கு மாநில அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 300 வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய பினராயி விஜயன் தெரிவித்ததாவது:
“கல்பேட்டா புறவழிச்சாலைக்கு அருகில் உள்ள எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, முதல்கட்டமாக அனைத்து வசதிகளுடன் அடங்கிய 300 வீடுகளை பிப்ரவரி மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்குவதே எங்கள் இலக்கு.
பாதுகாப்பு, தரம் மற்றும் நீண்டகால நிலைத்தன்மை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, இந்தத் திட்டம் அதிவேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த குடியிருப்புப் பகுதியில் மொத்தம் 410 வீடுகள் கட்டடப்பட்டு வருகின்றது. இந்த குடியிருப்புப் பகுதியில் நிலத்தடி மின்சார வலையமைப்பு, பெரிய கொள்ளளவு கொண்ட தொட்டியுடன் கூடிய குடிநீர் வழங்கல், உள் சாலைகள், ஒரு பொது சுகாதார மையம், அங்கன்வாடி, சமுதாயக் கூடம், சந்தை, விளையாட்டு திடல்கள் மற்றும் கழிவு மேலாண்மை வசதிகள் ஆகியவை அடங்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின்சக்தி அமைப்பு மற்றும் அதற்கெனத் தனி குடிநீர் சேமிப்புத் தொட்டியும் இருக்கும்.
கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் தரத்தை உறுதிசெய்து வருகிறோம். ஆய்வுகளுக்குப் பின்னரே பணிகள் முன்னோக்கிச் செல்கின்றன. கட்டுமானக் குறைபாடுகளுக்கு எதிராக ஒப்பந்தக்காரர்கள் 5 ஆண்டுகள் பாதுகாப்பு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 1,600 தொழிலாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். பல வீடுகளுக்கு மேற்கூரை அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் குடிநீர்த் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரள அரசின் வீட்டுவசதித் திட்டமான லைஃப் மிஷன் பற்றி பேசிய முதல்வர், “லைஃப் மிஷன் மூலம் இதுவரை 4,76,076 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை ஐந்து லட்சத்தை எட்டும். தற்போது 1,24,471 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.