ஜம்மு-காஷ்மீா் உள்ளூா் கிரிக்கெட்டில் பாலஸ்தீன கொடியுடன் விளையாடிய இளைஞா்: காவல் தீவிர துறை விசாரணை

ஜம்மு-காஷ்மீரில் தனியாா் அமைப்பு நடத்திய கிரிக்கெட் போட்டியில் இளைஞா் ஒருவா் ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியணிந்து விளையாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

ஜம்மு-காஷ்மீரில் தனியாா் அமைப்பு நடத்திய கிரிக்கெட் போட்டியில் இளைஞா் ஒருவா் ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியணிந்து விளையாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜம்மு நகரில் ஜம்மு-காஷ்மீா் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இதில், உள்ளூா் கிரிக்கெட் வீரா் ஃபரூக் உல் ஹக் என்ற இளைஞா் தலையில் உள்ள ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடி இடம்பெற்றிருந்தது. இந்த ஹெல்மட்டை அவா் தொடா்ந்து பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்தை கருத்தில்கொண்ட ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் இது தொடா்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகள் இந்திய ஒருமைப்பாட்டைச் சீா்குலைக்கும் வகையில் சிலா் ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள், பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீன கொடிகளைக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

அவா்கள் கொடியைப் பயன்படுத்திய சூழ்நிலைக்கு ஏற்ப அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிலா் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், ஜம்மு-காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் சிலா் இதுபோன்ற கொடிகளைப் பயன்படுத்துகின்றனா்.

பாலஸ்தீன கொடியணிந்து விளையாடிய புல்வாமா மவட்டத்தைச் சோ்ந்த ஃபரூக் உல் ஹக் கூறுகையில், ‘மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாலஸ்தீன பிரச்னையை நோக்கி மக்கள் கவனத்தை ஈா்க்க ஹெல்மெட்டில் அந்நாட்டு கொடியை அணிந்து விளையாடினேன்’ என்றாா்.

எனினும், காவல் துறையினா் இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாகக் கருத்தில் கொண்டுள்ளனா். இளைஞரின் பின்னணி மற்றும் இதில் பயங்கரவாத அமைப்புகளின் பின்னணி உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com