

மகாத்மா காந்தியை இரண்டாவது முறையாக மத்திய அரசு கொலை செய்துவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து, விபி ஜி ராம் ஜி சட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், "மகாத்மா காந்தி முதல்முறையாக கோட்சே-வால் கொல்லப்பட்டார்.
இரண்டாவது முறையாக, மத்திய அரசால் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு இந்தளவு பழிவாங்கல் இருக்கக் கூடாது.
20 ஆண்டுகளுக்கு முன்பு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வேலைக்கான உரிமை, கல்வி மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய வழிகாட்டும் கொள்கை உரிமைகளை அறிமுகப்படுத்தினார்.
இந்த உரிமைகள் ஏழை, சிறு விவசாயிகளுக்குப் பயனளித்து, சாமானிய மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
ஆனால், இப்போது அதற்கு பதிலாக விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் மோடி அரசு இந்த முடிவை எடுத்திருப்பது, சர்வாதிகார அணுகுமுறையைக் காட்டுகிறது.
இந்தத் திட்டத்தால், இப்போது ஊதியத்தில் மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் அளிக்க வேண்டியுள்ளது. இது, பிரிவு 280 (3) இன்படி அரசியலமைப்புக்கு எதிரானது.
பாஜகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துகிறது. இந்த விபி ஜி ராம் ஜி திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி திட்டத்தை ரத்து செய்து, பெருநிறுவனங்களின் நலன்களுக்கு அவர்கள் உதவும் அதேவேளையில், கிராமப்புற வாழ்வாதாரங்களை அழிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
மேலும், விபி ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மாநில அரசுகளுடன் அரசியலமைப்பு ரீதியாக கட்டாய ஆலோசனைகளைத் தொடங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் சித்தராமையா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.