

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், மாசடைந்த குடிநீரைக் குடித்த 10 பேர் பலியான நிலையில், இன்னமும் 200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் மக்கள், இதுவரை 13 பேர் பலியாகியிருப்பதாகக் கூறும் நிலையில், மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் 68 வயது பெண் பலியானதைத் தொடர்ந்து உயிர் பலி 10 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்றத்தில் மத்திய பிரதேச அரசு அளித்த நிலை அறிக்கையில், இதுவரை 4 பேர் பலியாகியிருப்பதாகவும், 10 பேர் பலியானதாக வரும் தகவல் பகிரதபுராவில் கலரா பரவி அதனால் பலியானவர்கள் விவரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
இந்தூர் குடிநீர் மாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட 294 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 93 பேர் வீடு திரும்பினர். 201 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தூரின் பகிரதபுரத்தில் நர்மதா ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை குடித்த உள்ளூர்வாசிகளுக்கு, கடந்த சில நாள்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுகாதாரமான நகரம் என அறியப்படும் இந்தூரில் நேரிட்ட இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதி மக்களை டிச.31ஆம் தேதி நேரில் சந்தித்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், குடிநீர் மாசுபாட்டினால் இதுவரை 4 பேர் பலியானதாகக் கூறினார்.
ஆனால், சில மணிநேரங்களில் இந்தூர் நகர மேயர் புஷ்யமித்ரா பார்கவா, 7 பேர் பலியானதாகத் தெரிவித்தார்.
உள்ளூர் மக்களோ, மாசடைந்த குடிநீரைக் குடித்த 6 மாத குழந்தை உள்பட 13 பேர் இதுவரைப் பலியாகியுள்ளனர் என கூறுவதால், உண்மையான பலி எண்ணிக்கை பற்றிய சந்தேகம் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.