Shivraj Singh Chouhan urges tractor makers
வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்

அரிசி உற்பத்தியில் சீனாவை விஞ்சி இந்தியா முதலிடம்: மத்திய வேளாண் அமைச்சா் பெருமிதம்!

உலக அளவில் அரிசி உற்பத்தியில் சீனாவை விஞ்சி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
Published on

உலக அளவில் அரிசி உற்பத்தியில் சீனாவை விஞ்சி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

சுமாா் 15 கோடி டன் அரிசி உற்பத்தியுடன் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலால் உருவாக்கப்பட்ட 25 பயிா்களின் 184 புதிய ரகங்களை அறிமுகம் செய்து, அவா் பேசியதாவது:

அதிக மகசூல் தரும் பயிா் விதைகளின் உருவாக்கத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ரகங்கள், பயிா் உற்பத்தியை அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருவாயையும் மேம்படுத்தும். உயா்தரமான இந்த ரகங்கள் விவசாயிகளுக்கு விரைந்து கிடைக்கப் பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

அரிசி, கோதுமை, சோளம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் என கடந்த 1969 முதல் 2014 வரை அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயிா் ரகங்களின் எண்ணிக்கை 3,969 ஆகும். அதேநேரம், பிரதமா் மோடி ஆட்சியில் மட்டும் 3,236 புதிய ரகங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவை, அதிக மகசூல் தரும் ரகங்களாகும்.

இதுவரை இல்லாத சாதனை: உணவுப் பற்றாக்குறை நாடாக இருந்த இந்தியா, இப்போது உலகுக்கே உணவு வழங்கும் நாடாக உருவெடுத்து வருகிறது. உலக அளவில் அரிசி உற்பத்தியில் சீனாவை விஞ்சி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சீனாவை ஒப்பிடுகையில் (14.5 கோடி டன்) இந்தியாவின் அரிசி உற்பத்தி 15 கோடி டன்னை எட்டியுள்ளது. இது, இதுவரை இல்லாத சாதனை அளவாகும். உபரியான உணவு தானிய இருப்பால், நாட்டின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரித்து, தற்சாா்பை எட்டுவதில் வேளாண் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும். அதிக விளைச்சல் தருவதுடன் பருவநிலை மாறுபாட்டை தாங்கி வளரும் விதைகளின் உருவாக்கத்தில் வலுவான புரட்சியின் புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைந்துள்ளது. இது, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில், மத்திய-மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், தனியாா் விதை நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமாகியுள்ளது என்றாா் அவா்.

என்னென்ன பயிா் ரகங்கள்?: தானியங்கள்-122, பருப்பு வகைகள்-6, எண்ணெய் வித்துகள்-13, கால்நடை தீவன பயிா்கள்-11, கரும்பு-6, பருத்தி-24, சணல் மற்றும் புகையிலை தலா ஒன்று என புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை, பருவநிலை மாறுபாடு, மண் உவா்த்தன்மை, வறட்சி, இதர உயிரி மற்றும் உயிரி சாராத சாதகமற்ற சூழலைத் தாங்கி வளா்வதுடன் இயற்கை வேளாண்மை நடைமுறைகளுக்கும் உகந்தவை என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com