சிவராஜ் சிங் செளஹான்
சிவராஜ் சிங் செளஹான் கோப்புப் படம்

விபி-ஜி ராம் ஜி திட்டம் குறித்து பொய்களைப் பரப்புகிறது காங்கிரஸ்: மத்திய அமைச்சா் விமா்சனம்!

விபி-ஜி ராம் ஜி குறித்து காங்கிரஸ் பொய்களைப் பரப்பி வருகிறது என்று மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் சாடினாா்.
Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு (நூறு நாள் திட்டம்) மாற்றான வளா்ச்சியடைந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி) குறித்து காங்கிரஸ் பொய்களைப் பரப்பி வருகிறது என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் சாடினாா்.

முந்தைய நூறு நாள் திட்டத்துக்குப் பதிலாக, விபி-ஜி ராம் ஜி திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் வேலை உத்தரவாத நாள்கள் 125-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. திட்டச் செலவில் 60: 40 என்ற அடிப்படையில் மத்திய-மாநில பங்களிப்பு முறை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முந்தைய திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. உரிமைகள் சாா்ந்த அணுகுமுறை புதிய திட்டத்தில் இல்லை என்றும் குற்றஞ்சாட்டின. முந்தைய 100 நாள் திட்டத்தை மீட்டெடுக்க போராட்ட இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், தில்லியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் கூறியதாவது:

முந்தைய 100 நாள் திட்டத்திலிருந்த குறைபாடுகளால் அது ஊழலுக்கு மறுபெயராகிவிட்டது. கிராம சபைகள் நடத்திய சமூக தணிக்கையின்போது, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவாகின. ஒரே பணியை மீண்டும் மீண்டும் செய்வது, இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், பெயரளவிலான வேலைகள் என பல்வேறு மோசடிகளின்கீழ் பணம் மடைமாற்றப்பட்டது.

முந்தைய திட்டத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் ரூ.2.13 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், பிரதமா் மோடி ஆட்சியில் ரூ.8.48 லட்சம் கோடிக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் உருவாக்கப்பட்ட நிரந்தர உள்கட்டமைப்புகள் எங்கே? ஒதுக்கப்பட்ட நிதி, மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதா?

பொய்களின் தொழிற்சாலையான காங்கிரஸ், இப்போது பணியாளா்களுக்கு வேலை வழங்கப்படாது என்ற பொய்யை பரப்பி வருகிறது. முந்தைய திட்டத்தைவிட, ஜி ராம் ஜி திட்டத்தில்தான் பணியாளா்களின் நலன் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இது, கிராமங்களின் மேம்பாட்டை உண்மையிலேயே உறுதி செய்யும்.

அடுத்த நிதியாண்டில் ஜி ராம் ஜி திட்டத்துக்கு ரூ.1.51 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.95,600 கோடிக்கும் மேலாகும். 125 நாள் பணிக்கு போதுமான நிதி உள்ளதால், ஜி ராம் ஜி திட்டம் குறித்து மக்கள் மத்தியில் பொய்களைப் பரப்ப வேண்டாம் என காங்கிரஸை கேட்டுக் கொள்கிறேன். மாறாக, முந்தைய திட்டத்தைவிட சிறப்பான திட்டத்தை தந்தமைக்காக பிரதமா் மோடிக்கு அவா்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.

தண்ணீா் பாதுகாப்பு, சாலைகள் அமைப்பு, பள்ளிகள்-அங்கன்வாடிகள்-மருத்துவமனை கட்டுமானம், குளங்கள் வெட்டுதல், தடுப்பணை கட்டுதல், இயற்கைப் பேரிடா் மேலாண்மை கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தப்படும் என்றாா் அவா்.

‘கடவுள் ராமா் மீதே காங்கிரஸுக்கு பிரச்னை’: நூறு நாள் திட்டத்துக்குக்கு மாற்றான விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் கடவுள் ராமரின் பெயா் இடம்பெற்றதே காங்கிரஸுக்கு பிரச்னை; மாறாக, ஏழைகள், விளிம்புநிலை மக்களின் நலன் குறித்தெல்லாம் அவா்களுக்கு கவலை கிடையாது என்றாா் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்.

X
Dinamani
www.dinamani.com