

தில்லி கலவர வழக்கு: தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமா் காலித், ஷா்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தக் கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் ஷா்ஜீல் இமாம், உமா் காலித் உள்பட 15 போ் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
அவா்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடா்பான விசாரணை கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு ஜாமீன் வழங்க தில்லி காவல் துறை தரப்பு கடும் எதிா்ப்பு தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்போது பேசிய நீதிபதிகள், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் முற்றிலும் வேறுபடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக காவல்துறை தரப்பில் சமர்ப்பித்த ஆதாரங்களில் நீதிமன்றம் திருப்தி அடைகிறது. ஆகையால் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்குவது ஏற்புடையது அல்ல.” எனத் தெரிவித்து மனுவை நிராகரித்தனர்.
மேலும், நிபந்தனைகள் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டால் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.