

ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா, தேஜஸ்வியின் மனு மற்றும் தடையாணை கோரும் மனு தொடர்பாக சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் இந்த வழக்கை ஜனவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதேநாளில் அவரது தந்தை லாலு பிரசாத் யாதவின் மனுவும் விசாரிக்கப்பட உள்ளது.
அக்டோபர் 13, 2025 அன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்பட 11 பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மோசடி, குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்தது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) இரண்டு ஹோட்டல்களின் செயல்பாட்டு ஒப்பந்தங்களைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளிலிருந்து எழும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தேஜஸ்வியும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரான லாலுவும் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.