

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 26 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக சுக்மா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில்,
சரணடைந்தவர்களில் ஏழு பெண்கள் உள்பட இந்த நக்சலைட்டுகள், "பூனா மார்கம்" என்ற மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மூத்த காவல்துறை, சிஆர்பிஎஃப் அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.
26 பேரும் மாவோயிஸ்ட்டுகளின் மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தின் பட்டாலியன், தெற்கு பஸ்தர் பிரிவு, மாட் பிரிவு மற்றும் ஆந்திர ஒடிசா எல்லைப் பிரிவு ஆகியவற்றில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். மேலும், சத்தீஸ்கரின் அபுஜ்மாத், சுக்மா மற்றும் ஒடிசாவின் எல்லையோரப் பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர்.
மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டதாக நக்சலைட்டுகள் தெரிவித்தனர்.
சரணடைந்தவர்களில், நிறுவனக் கட்சி உறுப்பினரான லாலி என்ற முச்சாகி ஆய்தே லக்மு (35) மீது ரூ. 10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2017-ல் கோராபுட் சாலையில் (ஒடிசா) வாகனத்தை இலக்காகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல் உள்பட பல முக்கிய வன்முறைச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். அந்தத் தாக்குதலில் 14 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும் நான்கு முக்கிய நக்சலைட்டுகளான ஹேம்லா லக்மா (41), ஆஸ்மிதா என்ற கம்லு சன்னி (20), ராம்பதி என்ற பதம் ஜோகி (21) மற்றும் சுந்தம் பாலே (20) ஆகியோர் மீது தலா ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. 2020-ல் மின்பாவில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் லக்மா ஈடுபட்டிருந்தார். அந்தத் தாக்குதலில் 17 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
சரணடைந்த மற்ற நக்சலைட்டுகளில், மூவர் மீது தலா ரூ. 5 லட்சம், ஒருவர் மீது ரூ. 3 லட்சம், மற்றொருவர் மீது ரூ. 2 லட்சம், மூவர் மீது தலா ரூ. 1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
சரணடைந்த அனைத்து நக்கல்களுக்கும் தலா ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது என்றும், அரசின் கொள்கையின்படி அவர்களுக்கு மேலும் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய அனைவரும் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று சவான் வேண்டுகோள் விடுத்தார். அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கை உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.