தில்லி சட்டப்பேரவைக்குள் அமர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தில்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அரசாங்கத்தால் குரு தேஜ் பகதூர் தியாக தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி குறித்து செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் காற்று மாசுபாடு பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பியதால் அமளி நிலவியது.
இதனிடையே, குரு தேஜ் பகதூர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக பாஜக எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாஜக தலைவர்களின் கூற்றுப்படி, குரு தேஜ் பகதூரின் தியாகம் குறித்து அவையில் விவாதிக்கப்பட்டபோது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறப்பட்டன. இருப்பினும், கிடைக்கப்பெற்ற ஆடியோவில் அதிஷி பேசிய சரியான வார்த்தைகள் தெளிவாகக் கேட்கவில்லை. இருப்பினும், குருவின் பெயருடன் சேர்த்துப் பயன்படுத்தப்பட்ட எந்தவொரு பொருத்தமற்ற வார்த்தைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள், அதிஷி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேரவையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், அதிஷியின் பேச்சுக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாஜகவினர் வைத்த கோரிக்கைக்கு, ஆடியோவை முழுமையாக கேட்ட பிறகு அதுகுறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.