

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மனநல சிகிச்சை தேவை என்று அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக அம்மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் எழுப்பி வருகின்றது.
சமீபத்தில் சாகா் தீவில் பேசிய மமதா, “எஸ்ஐஆா் பணியில் அனைத்துவிதமான தவறான நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. தகுதியுள்ள வாக்காளா்களை இறந்துவிட்டதாக தோ்தல் ஆணையம் குறிப்பிட்டது.
அதுமட்டுமன்றி, பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் உருவாக்கப்பட்ட கைப்பேசி செயலியை எஸ்ஐஆா் பணிக்கு தோ்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. இது சட்டவிரோதமானது மட்டுமன்றி, அரசமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது” என்றாா்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்த சுவேந்து அதிகாரி, “அவருக்குச் சிறிது மனநல சிகிச்சை தேவைப்படுகிறது. இல்லையென்றால், அவர் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணியில் நிலவும் குழப்பம் குறித்து தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள திரிணமூல் காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வோம் என்று அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.