

ஹரியாணாவில் 10 மகள்களைப் பெற்ற தம்பதி 11 வது பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.
இதில், வேடிக்கை என்னவெறால், தனது மகள்களின் பெயரையே தந்தை சரியாக நினைவுகூர முடியாமல் மறந்துள்ளார்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக தனது 7 வது மகளுக்கும் 10 வது மகளுக்கும் லட்சுமி என ஒரே பெயரையே வைத்துள்ளனர்.
10 மகள்களின் பெயரைக் குறிப்பிடுமாறு செய்தியாளர் கேட்கும்போது மகள்களின் பெயரையே தந்தை மறந்துள்ளார்.
எனினும், ஆண் குழந்தை பிறந்துள்ளது தற்போது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது வாழ்வில் மறக்க முடியாத தருணம் எனவும் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம் ஹிந்த் மாவட்டத்திற்குட்பட்ட உசானா பகுதியில் உள்ள மருத்துவமனையில் 11 வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் 37 வயது பெண். ஏற்கெனவே 10 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஆண் குழந்தையை தற்போது பெற்றெடுத்துள்ளார்.
குழந்தையின் தந்தை சஞ்சய் குமார், தினக்கூலியாக உள்ளார். 2007 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 19 ஆண்டுகளில் தற்போது 11 வது குழந்தையை பெற்றுள்ளனர். மூத்த மகள் 12 ஆம் வகுப்பு படிக்கிறார். மற்ற மகள்களும் பள்ளிக்கூடம் படிக்கும் நிலையில், 11 வது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய மருத்துவர், ''11 வது பிரசவத்துக்கு கடந்த 4 ஆம் தேதி பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மிகவும் ஆபத்தான பிரசவமாக இது நடந்தது. ஏனெனில், அவருக்கு 4 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. தற்போது பிரசவம் முடிந்து தாயும் சேயும் நலமாக உள்ளனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது'' என்றார்.
இது தொடர்பாக பேசிய குழந்தையின் தந்தை சஞ்சய் குமார், ''என் மகள்களுக்கு சகோதரன் இருக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். என் மகள்களும் இதையே விரும்பினர். என் குறைந்த வருவாயில் என் மகள்கள் அனைவரையும் படிக்கவைத்து வருகிறேன். இதுவரை என்ன நடந்ததோ அது இறைவனின் அருள். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இக்காலத்தில் பெண்களும் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். ஆணாதிக்கத்துக்காக ஆண் குழந்தை வேண்டும் என்ற பிடிவாதம் இல்லை. வீட்டில் ஆண் குழந்தை இருக்க வேண்டும் என்ற சமூக அழுத்தம் இனி எனக்கு இருக்காது'' எனக் குறிப்பிட்டார்.
தற்போது 11 வது குழந்தையாக பிறந்துள்ள தங்கள் சகோதரனுக்கு சகோதரிகள் அனைவரும் சேர்ந்து, தில்குஷ் எனப் பெயரிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.