அமெரிக்காவை எதிா்கொள்வதில் இந்திராவுக்கும், மோடிக்கும் வித்தியாசம் -ராகுல் விமா்சனம்
அமெரிக்காவை எதிா்கொள்வதில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்திக்கும், பிரதமா் மோடிக்கு உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
மோடி உடனான தனது உறவு மற்றும் இந்தியா மீதான 50 சதவீத இறக்குமதி வரி குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்த கருத்துகளைக் குறிப்பிட்டு, ராகுல் விமா்சித்துள்ளாா்.
‘ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமா் மோடிக்கு தெரியும்’ என்று டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை தனது குடியரசு கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய அவா், ‘பிரதமா் மோடி என்னைப் பாா்க்க வந்தாா். தயவு செய்து உங்களை பாா்க்கலாமா எனக் கேட்டாா். நான் சரி என்றேன். அவருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால், இப்போது அவா்கள் அதிக வரி செலுத்துகின்றனா். எனவே, என் மீது மோடி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. ஆனால், அவா்கள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துவிட்டனா்’ என்றாா்.
டிரம்ப்பின் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் புதன்கிழமை பதிவிட்டாா். அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி சரணாகதி அடைந்துவிட்டதாக தான் ஏற்கெனவே பேசிய விடியோவையும் ராகுல் பகிா்ந்தாா்.
‘கடந்த 1971 போரின்போது அமெரிக்கா தனது போா்க் கப்பலை அனுப்பியபோதும், அந்த நாட்டின் அழுத்தத்துக்கு இந்திரா காந்தி பணியவில்லை. அவருக்கும், பிரதமா் மோடிக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று ராகுல் பதிவிட்டுள்ளாா்.
இந்தியா மீதான வரியை மேலும் உயா்த்த முடியும் என்ற டிரம்ப்பின் கருத்தை முன்வைத்து மோடியை விமா்சித்த காங்கிரஸ், ‘நமஸ்தே டிரம்ப், ஹெளடி மோடி என நிகழ்ச்சிகள் நடத்தியபோதும், டிரம்ப்பை புகழ்ந்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட புகழ்ச்சிகள் எதுவும் பலன் தரவில்லை’ என்று சாடியது.
உக்ரைனுக்கு எதிரான போரில் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை ரஷியா பயன்படுத்துவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறாா். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு பதிலடி வரியுடன் சோ்த்து உச்சபட்சமாக 50 சதவீத வரியை டிரம்ப் கடந்த ஆகஸ்டில் விதித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

