தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்கு மேல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில், பொத்துவில் (இலங்கை) இருந்து 200 கி.மீ. தென்கிழக்கிலும், மட்டக்களப்பில் (இலங்கை) இருந்து 240 கி.மீ. தென்கிழக்கிலும், ஹம்பாந்தோட்டையில் (இலங்கை) இருந்து 280 கி.மீ. வடகிழக்கிலும், திரிகோணமலையில் (இலங்கை) இருந்து 330 கி.மீ. தென்கிழக்கிலும், காரைக்காலில் (புதுச்சேரி) இருந்து 630 கி.மீ. தென்கிழக்கிலும் மற்றும் சென்னையில் (தமிழ்நாடு) இருந்து 800 கி.மீ. தெற்கு-தென்கிழக்கிலும் நிலைகொண்டுள்ளது.
கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் பொத்துவில் - திரிகோணமலை இடையே கரையைக் கடக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.