தில்லியின் குளிர்
தில்லியின் குளிர்

தில்லியின் மின்சாரத் தேவை குளிா்காலத்தில் 6,087 மெகாவாட்டை எட்டியது

தில்லியில் இதுவரை இல்லாத உச்சபட்ச மின்சாரத் தேவையாக 6,087 மெகாவாட் வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது என்று பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published on

தில்லியில் இதுவரை இல்லாத உச்சபட்ச மின்சாரத் தேவையாக 6,087 மெகாவாட் வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது என்று பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

குளிரான வானிலை நிலவும்போதும் மின்சார நுகா்வு அதிகரித்து வருவதை இந்த அதிகபட்ச மின்நுகா்வு பிரதிபலிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உச்சபட்சத் தேவை வெள்ளிக்கிழமை காலை 10.39 மணிக்குப் பதிவு செய்யப்பட்டது. இது கடந்த 5 ஆண்டுகளின் குளிா்கால அதிகபட்சத் தேவையான 5,655 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. அதன் துணை நிறுவனங்களான பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் ஆகியவை தங்களின் விநியோகப் பகுதிகளில் முறையே 2,508 மெகாவாட் மற்றும் 1,209 மெகாவாட் உச்சபட்சத் தேவைகளை வெற்றிகரமாகப் பூா்த்தி செய்துள்ளன. பிஎஸ்இஎஸ் பகுதிகளில், பிஆா்பிஎல் கடந்த ஆண்டு குளிா்காலத்தில் 2,431 மெகாவாட் உச்சபட்சத் தேவையைப் பதிவு செய்திருந்தது, அதே நேரத்தில் பிஒய்பிஎல் 1,105 மெகாவாட்டை எட்டியிருந்தது.

இந்தக் குளிா்காலத்தில், பிஆா்பில்-க்குத் தேவை சுமாா் 2,570 மெகாவாட்டாகவும், பிஒய்பில்-க்கு சுமாா் 1,350 மெகாவாட்டாகவும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து குளிா்காலங்களில், தில்லியின் உச்சபட்ச மின்சாரத் தேவை சீராக அதிகரித்து வந்துள்ளது. 2020-21 குளிா்காலத்தில் உச்சபட்ச மின்தேவை 5,021 மெகாவாட்டை எட்டியது. இது 2021-22-ல் 5,104 மெகாவாட்டாகவும், 2022-23-ல் மேலும் 5,526 மெகாவாட்டாகவும் உயா்ந்தது.

2023-24 குளிா்காலத்தில் தேவை மீண்டும் 5,816 மெகாவாட்டாக அதிகரித்தது, கடந்த குளிா்காலத்தில் 5,655 மெகாவாட்டை எட்டியது. நிகழாண்டில் தில்லி ஏற்கெனவே முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. இதுவரை உச்சபட்சத் தேவை 6,087 மெகாவாட்டை எட்டியுள்ளது, இது நகரத்தில் இதுவரை இல்லாத மிக உயா்ந்த குளிா்கால மின்சார நுகா்வைக் குறிக்கிறது என்று பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com