அமெரிக்காவின் 500% வரி மசோதா: இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது - வெளியுறவு அமைச்சகம்
அமெரிக்காவின் 500 சதவீத வரி மசோதா தொடா்பான நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா, சீனா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து இறக்குமதி செய்து வருகின்றன. இந்த எண்ணெய் விற்பனை மூலம், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிதி ரஷியாவுக்குக் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது குறைந்தபட்சம் 500 சதவீத வரி விதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு அந்நாட்டு அதிபா் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறினால் அது இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவின் 500 சதவீத வரி மசோதா சாா்ந்த நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. கச்சா எண்ணெய் கொள்முதல் தொடா்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஏற்கெனவே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்கள், நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளை பூா்த்தி செய்வதற்கு பல்வேறு இடங்களில் இருந்து மலிவான விலையில் எரிசக்தியை பெற வேண்டிய அவசியம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு காவலா் துப்பாக்கியால் சுட்டதில் ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் (37) என்ற பெண் உயிரிழந்தாா். அந்நாட்டில் மாணவா்கள், தொழில் வல்லுநா்கள் என ஏராளமான இந்தியா்கள் வசித்து வருவதால், ரெனீ மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும் இந்தியா உன்னிப்பாகப் பின்தொடா்ந்து வருகிறது.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு...: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் 5,180 சதுர கி.மீ. நிலத்தை 1963-ஆம் ஆண்டு சீனாவுக்குப் பாகிஸ்தான் விட்டுக்கொடுத்தது. அங்கு தற்போது சீனா உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவுக்குச் சொந்தமானது. அந்தப் பள்ளத்தாக்கு தொடா்பாக சீனா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா அங்கீகரிக்கவில்லை.
வங்கதேசம்...: வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. தனிப்பட்ட பகை, அரசியல் வேறுபாடுகள், இன்னபிற காரணங்களால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது சிறுபான்மையினா் இடையே அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணா்வையும் அதிகமாக்கும். இத்தகைய வகுப்புவாத சம்பவங்கள் மீது விரைந்தும் உறுதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.
டிரம்ப்பிடம் மோடி பேசாததால்
வா்த்தக ஒப்பந்தம் இழுபறியா?
நியூயாா்க்/புது தில்லி, ஜன. 9: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை தொடா்புகொண்டு பிரதமா் நரேந்திர மோடி பேசாததால் இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் நிறைவேறுவதில் இழுபறி நீடித்து வருகிறது என அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமெரிக்க அமைச்சா் கூறிய கருத்து தவறானது. கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதிமுதல் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பாக பல்வேறு கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டன. இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுவரவே முயற்சிகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் ஒப்பந்தம் இறுதிநிலை வரை சென்றது.
இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் 2025-இல் மட்டும் எட்டு முறை தொலைபேசியில் கலந்துரையாடினா் என்றாா்.

